“கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமையில்லை” – நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் அனுப்பியது. இருப்பினும், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, அமலாக்கத்துறை சென்னை உயர் நீதி மன்றத்தை நாடியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆதலால், அதிமுக எம்.பி தம்பிதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார். அதே நேரத்தில், வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் நேரு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் வேண்டுகோளுக்கிணங்க லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த சூழலில், தன்னுடைய தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (28-07-26) தலைமை நீதிபதி அமர்வு முன்பு வந்தது. அப்போது கே.என்.நேரு தரப்பில், ‘தன் தரப்பு வாதங்களை கேட்காமல் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு முரணானது. தன் தரப்பு வாதங்களை முன்வைக்க உரிமை வேண்டும்’ என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், ‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அந்த வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமையில்லை’ என்று வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். 

Source link