சென்னை: ”புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும் வகையில் உலகத்தரத்திலான, ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்’ மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும்,” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
மின் கட்டமைப்பின் தேவையை கருத்தில் கொண்டு, ‘லோட் புளோ’ ஆய்வின் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு வெளிப்படையான மற்றும் அறிவியல் சார்ந்த அனுமதி நடைமுறை செயல்படுத்தப்படும்.
சூரியசக்தி மின் நிலையங்களில், மாலை 4:00 மணிக்கு மேல் மின் உற்பத்தி குறைந்து விடும். மாலையில் ஏற்படும் உச்ச நேர மின் தேவையை சமாளிக்க குறுகிய கால மின் கொள்முதல் செய்யப்படுகிறது.
எனவே, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்த உலக தரத்திலான, ‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்’ மற்றும் பேட்டரி மறுசுழற்சி தொடர்பான விரிவான புதிய கொள்கை, ஐ.ஐ.டி., நிபுணர்களுடன் இணைந்து விரைவில் வெளியிடப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதை ஊக்குவிக்கவில்லை.
தனியாரிடம் கட்சி நிதி வசூலித்து, அதிக திறன் உடைய சூரியசக்தி மின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதால், வீடுகளுக்கான சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முயற்சிக்கவில்லை. எனவே , மேற்கூரை சூரியசக்தி மின் திட்டங்களை ஊக்குவிக்க, மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் புதிய கொள்கை, எளிய அனுமதி நடைமுறை மற்றும் ஒருங்கிணைந்த மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கூரை சூரியசக்தி மின் திட்டத்துக்கு விரைவில் மொபைல் செயலி அறிமுகம் பேட்டரி மறுசுழற்சி புதிய கொள்கை, ஐ.ஐ.டி., நிபுணர்களுடன் இணைந்து வெளியிடப்படும்.
