திருநெல்வேலி / சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரில் செயல்படும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகம்சமீபத்தில், அரசு நிகழ்வுகளில் முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், நிறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
அதன்படி, சுந்தரனார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் இதே நடைமுறை பின்பற்றப்படும் என ஆளுநர் மாளிகையும் உறுதி செய்திருந்தது. இதற்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனால், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் சென்ற வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டமளிப்பு விழா தொடங்க இருந்த நிலையில், தங்கப்பதக்கம் பெறுவோருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டதால், முனைவர் பட்டம் பெறுவோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அனைவருக்கும் ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால்ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழா தொடங்கியது.
ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், நிறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆளுநர் அர்லேகர் 871 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மும்பை காவல்துறை துணை ஆணையர் ராதா சுதா,நிலக்கோட்டை நீதிபதி திரிவேணி ஆகியோர் முனைவர் பட்டம் பெறஇருந்தனர். ஆனால் அவர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர் விஸ்வநாதன், எம்.பி., எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாதது மரபை மீறிய செயல் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன்படி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி,மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தவாக தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
