முஸ்லிம் அமைப்புகளை வளைக்க முயற்சி; திமுக.,வை பலவீனமாக்க தவெக திட்டம்

– நமது நிருபர் –

தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும், முஸ்லிம் அமைப்புகளிடம் பேச்சு நடத்தி, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில், தமிழக வெற்றிக் கழகம் இறங்கி உள்ளது.

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தலில், தி.மு.க., வசமிருந்த சிறுபான்மையினர் ஓட்டுகளை குறி வைத்து தான், த.வெ.க., பிரசாரம் செய்தது. ஆனால், சிறுபான்மையினர் அமைப்புகள், தி.மு.க.,வுடன் மிக நெருக்கமாக இருந்ததால், அந்த ஓட்டுகளை, த.வெ.க.,வால் முழுமையாக பெற முடியவில்லை.

இதனால் தான், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சேப்பாக்கம், துறைமுகம், ஆம்பூர், வாணியம்பாடி, கடையநல்லுார், ராமநாதபுரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல தொகுதிகள், தி.மு.க., கூட்டணி வசம் சென்றன.

அதேபோல, கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரியில், த.வெ.க.,வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதேநிலை நீடித்தால், இடைத்தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க.,வுக்கு கூட்டணி பலம் இல்லை என்றாலும், கணிசமான வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் சன்னி முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், மாவட்ட ஹாஜி நியமனங்களிலும், வக்ப் பதவிகளிலும், ஷியா முஸ்லிம்களே உள்ளனர். இதனால், இரு தரப்புக்குள்ளும் பிரச்னைகள் உள்ளன. இதை த.வெ.க., தனக்கு சாதகமாக்கி கொள்ள முற்படுகிறது.

சென்னை, டெல்டா, வடக்கு மாவட்டங்களில் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்துகிறது. அதேபோல, இனி சன்னி முஸ்லிம்களுக்கு, ஹாஜி, வக்ப் பொறுப்புகளில், அதிக இடங்கள் வழங்கப்பட உள்ளன. த.வெ.க.,வில் இணையும் முஸ்லிம் இளைஞர்களுக்கு, பதவிகளும் தரப்பட உள்ளன.

சினிமாவுக்கு எதிரான கருத்து கொண்ட, சில பழமைவாத முஸ்லிம் அமைப்புகள், முதல்வர் விஜய் மற்றும் த.வெ.க.,வை கடுமையாக விமர்சிக்கின்றன. இனி அப்படி விமர்சிக்கக் கூடாது என, அவர்களுடன் பேச்சு நடக்கிறது. அதற்கு உடன்படாவிட்டால், அவர்களை அடக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும், அந்த கட்சியின் தொண்டர்கள், தி.மு.க.,வுடன் நெருக்கமாக உள்ளனர்.

அதேநேரத்தில், அமைச்சர் ஷாஜகான் மற்றும் முஸ்லிம் லீக் மூத்த நிர்வாகிகள் இடையே, பனிப்போர் நடக்கிறது. அதை சாதகமாக்க, இரு தரப்பில் ஒருவரை, த.வெ.க.,வில் இணைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் போது, முஸ்லிம் இருவருக்கு அமைச்சர் பதவி தரவும், முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்படியான தொடர் நடவடிக்கையால், முஸ்லிம் அமைப்புகள், த.வெ.க., பக்கம் முழுமையாக வந்துசேரும். இவ்வாறு த.வெ.க., வட்டாரங்கள் கூறின.

Source link