சேலம்: பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்று முடிந்த நிலையில், முன்னணி கல்லுாரிகளில் ஏராளமான இடங்களை, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவ கனவில் உள்ள அவர்கள், பாதுகாப்பு கருதி பொறியியல் இடங்களை முடக்குவதால் பல மாணவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் மருத்துவ கலந்தாய்வை நடத்திவிட்டு, பொறியியல் கலந்தாய்வை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முதல் சுற்று முடிந்து, ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உரிய கல்லுாரிகளில் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை ஒப்படைத்து, சீட்களை உறுதிப்படுத்திக்கொள்ள, நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டதால், 2 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு இன்னும் கலந்தாய்வு தொடங்கப்படாத நிலையில் மருத்துவ கல்வியில் சேர விரும்பும் பலர், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக முதல் சுற்றில் முன்னணி கல்லுாரிகளில் சீட் எடுத்த பலரும் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
இருப்பினும் மருத்துவ சீட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றத்தில், இன்ஜினியரிங் சீட்டை உறுதிப்படுத்த தயாராக உள்ளனர். நீட் தேர்வில் சீட் கிடைத்தால், இன்ஜினியரிங் படிப்பில் இருந்து விலகலாம் என்ற முடிவில் பலரும் உள்ளனர்.
இதுகுறித்து, இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் கூறியதாவது: முன்னணி கல்லுாரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அதிக வரவேற்பு உள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் சேர, நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இந்த கல்லுாரிகளில் முதல் சுற்றிலேயே இந்த இடங்கள் நிரம்பிவிடும். தற்போது முதல் சுற்று முடிந்த நிலையில், சேரும் மாணவர்களில் பலரும் நீட் தேர்வு எழுதி, கலந்தாய்வுக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., சீட் கிடைத்தால், தற்போது எடுத்து வைத்துள்ள பொறியியல் சீட்டை விட்டு விலகிவிடுவர். அவர்களுக்கான சான்றிதழ், கட்டணம் ஆகியவற்றை கொடுத்தாக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதனால் காலியாகும், அந்த லேப்ஸ்டு சீட்களை, தனியார் கல்லுாரியாக இருப்பின், நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பிக்கொள்ளலாம். இதனால் இந்த முடிவில் வரும் மாணவர்களை, சில தனியார் நிர்வாகங்கள் ஊக்குவிக்கின்றன. அதேநேரம் அண்ணா பல்கலை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் சேர்ந்த பின் விலகுவதால் ஏற்படும் காலி இடங்களில் வேறு மாணவர்கள் சேர முடியாது. இதனால் பல மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது.
நீட் மாணவர்களின் இரட்டை நிலைப்பாட்டால், பொறியியல் படிப்புக்கு மட்டும் தயாரான அடுத்த நிலை மாணவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு மாணவரின் பாதுகாப்பு தேடல், மற்றொரு மாணவரின் வாழ்நாள் கனவை பறிக்கும் அவல நிலையாக மாறியுள்ளது. இதை தடுக்க மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடித்துவிட்டு, அதற்கு பின் பொறியியல் கலந்தாய்வை நடத்தும் நடைமுறையை தமிழக அரசு உறுதியாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
