நமது நிருபர்
பழநி கோவில் நில மோசடி வழக்கில், வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில், தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் தனி நபர்களுக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த புகாரில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளையை சேர்ந்த முருகதாஸ், திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழநி சேதுபதி, கோவில் நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறையினர், பதிவுத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற வழக்கு, பத்திரப்பதிவு, விற்பனையாளர், பயனாளி, சாட்சிகள், புரோக்கர், எழுத்தர், பராமரிப்பு, நிர்வாகம் என இதுவரை, 82 பேரிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை சேகரித்துள்ளனர். இதுவரை 82 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இந்த மோசடி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
