டோக்கியோ: ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியூஷு தீவின் குமாமோட்டோவில் நேற்று பிற்பகல், 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டடங்கள், சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் சேதமடைந்ததில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
பூமிக்கு அடியில் குறைந்த ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால், கியூஷுவில் உள்ள பல மாகாணங்களுக்கு அதிகாரிகள் அவசரகால நிலநடுக்க எச்சரிக்கைகளை வெளியிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கு பின் திரும்பப் பெறப்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 40,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடிவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி தெரிவித்தார்.
