சென்னை: மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் நேற்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவ மக்கள், பல தலைமுறைகளாக மீன்பிடித் தொழில், மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில் சுற்றுலாத் திட்டங்களை கொண்டு வர முயல்வதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை நொச்சிக்குப்பம் லூப் சாலையில், பாரம்பரிய மீன்பிடி, மீன் வியாபாரத்தை பாதுகாக்கக் கோரியும், கடற்கரை சுற்றுலாத் திட்டங்களை கைவிட வலியுறுத்தியும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மீனவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “புதிய மீன் விற்பனை அங்காடி அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டது.
அது எங்களுக்கு வேண்டாம். காலம் காலமாக லூப் சாலையில், சாலை ஓரமாக நாங்கள் வியாபாரம் செய்தோம். அதுவே எங்களுக்கு போதும். புதிய மீன் அங்காடியை எங்களுக்கு சமுதாயக் கூடமாக அமைத்துத் தர வேண்டும்” என்றனர்.
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும், மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக முன்னாள் வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று, மீனவர்களை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தார்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மயிலாப்பூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினருமான வெங்கட்ரமணன், மீனவ அமைப்பு பிரிதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சில பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் பிரச்சினை செய்கின்றனர். வருங்காலங்களில், மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கடைகள் அமைக்க தெரிவித்துள்ளோம். மீனவப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக கடைகளை அமைத்து, ஒதுக்கிக் கொடுத்துள்ளோம்.
பாதுகாப்பை விரும்பும் மக்கள் நவீன அங்காடிக்கு வரலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வருங்காலங்களில் சமூக கூடங்கள் அமைத்துக் கொடுப்போம். ஒவ்வொரு மீனவ சகோதரிக்கும் தேவையான, வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுப்போம். 150 பேர் கடை கேட்டு மனு கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை மற்றும் மாநகராட்சி உதவியுடன் அவர்களுக்கு கடை ஒதுக்கிக் கொடுப்போம் என்று அவர் கூறினார்.
