சென்னை: வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், நீர்நிலைகளைச் சீரமைக்கவும் சென்னை அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.
சென்னையின் முக்கிய ஆற்றுப் படுகையான அடையாறு ஆறு, செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் மற்றும் மழைநீரை கடலுக்குக் கொண்டு செல்லும் முக்கிய வழித் தடமாகும். தற்போது, இந்த ஆற்றின் சில பகுதிகளில் ஆகாயத் தாமரைகள் மற்றும் மிதவைப் பொருட்கள் தேங்கி நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைச் சீரமைக்கும் வகையில், நேற்று காலை மணப்பாக்கம் அடையாறு ஆற்றுப் பகுதியில் தூர்வாரும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்.
நீர்வளத் துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் இப்பணியால், விமான நிலைய ஓடுபாதை முதல் திருவிக பாலம் வரை நீரோட்டம் சீராகும்.
இதன்மூலம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கி, மழைநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.
பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இணைப்பு மேம்பாலம் அருகே அமைந்துள்ள இக்கால்வாயில், பள்ளிக்கரணை மற்றும் ஒக்கியமடுவு பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் ஆகாயத் தாமரைகள் பெருமளவில் தேங்கியுள்ளன.
இதனால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். பெருநிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் இந்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
