புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடர்ந்து இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நாட்டின் இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி சூர்ய காந்தின் விமர்சனத்தை தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற நையாண்டி சமூக ஊடக அமைப்பு இணையத்தில் தொடங்கப்பட்டது. அபிஜித் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மிகப்பெரிய இயக்கமான உருவெடுத்தது. இது நாடு தழுவிய போராட்டங்களை ஏற்படுத்தி இறுதியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் முடிவடைந்தது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ‘ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் 55 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்வோரை கடந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. இது இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை மட்டுமே பின்தொடர்கிறது. மேலும், தங்களை “மக்களால் ஆதரிக்கப்படும் ஓர் இயக்கம்” என்று அழைத்துக் கொள்கிறது.
அதன் சுயவிவரப் பக்கத்தில் பி.ஆர்.அம்பேத்கரின் ‘கற்பி, ஒன்று சேர் புரட்சி செய்’ என்ற முழக்கத்துடன் “அனைத்து சாதிகளும் சமமானவை; இந்த நாடு சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை” என்ற இந்திச் செய்தியும் இடம் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், தங்களுக்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அமைப்பின் நிறுவனர் யார் என்று இன்னும் தெரியவரவில்லை.
E20 ஜனதா கட்சி
இதேபோன்ற மற்றொரு நையாண்டி சமூக ஊடகப் பக்கமான ‘E20 ஜனதா கட்சி’ என்பதும் இணையத்தில் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது, இதன் நிறுவனரின் அடையாளமும் வெளிவரவில்லை. 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலவையான ‘E20 எரிபொருளை’ ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்தை இது இலக்கு வைப்பதாகத் தெரிகிறது.
