கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு!

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான ஏழு நாட்களுக்குள் போட்டியிட்ட வேட்பாளர், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபாட் கருவிகளை பரிசோதிக்க கோரிக்கை விடுக்கலாம். எனவே அதற்கான கட்டணத்தை செலுத்திய பிறகு, தேர்தல் ஆணையம் இந்தச் சரிபார்ப்பு பணிக்கு ஏற்பாடு செய்யும். இத்தகைய சுழலில் தான்  கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதோடு அவர் ரூ. 47,000 கட்டணம் செலுத்தியிருந்தார். 

இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (29.07.2026) பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மு.க. ஸ்டாலின் நேரில் பங்கேற்காத நிலையில், அவருக்குப் பதிலாக அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்களும் இந்தச் சரிபார்ப்பு பணியில் பங்கேற்றுள்ளனர். 

ஒவ்வொரு நாளும் இரண்டு விவிபாட் கருவிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாகவும், இந்தச் செயல்முறை இந்த வாரம் முழுவதும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவும், வேட்பாளர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பரிசோதனையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபாட் கருவியில் பதிவாகியுள்ள அச்சுப் பதிவுகளும்  ஒன்றுடன் ஒன்று பொருந்துகிறதா என்பது குறித்து ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. 

இந்தப் பரிசோதனைப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அதன் முடிவுகள் ஏழு நாட்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக  கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததார். தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபு 80,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Source link