தென் கொரிய நாட்டை சேர்ந்த 25 வயதான கிம் என்ற இளம் பெண், தனது ஆண் நண்பருடன் இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட விரும்பினார். அதன் அடிப்படையில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைப் பார்க்க, காலை 7 மணியளவில் தனது நண்பருடன் சென்றிருந்தார்.
தாஜ்மகாலின் கிழக்கு வாயிலுக்கு அருகே, வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழங்கப்படும் காலணி உறைகளை வாங்குவதற்காக ஆண் நண்பர் சென்றார். அப்போது, அங்கே சுற்றித்திரிந்த குரங்குகளில் ஒன்று, தனியாக நின்று கொண்டிருந்த கிம்மின் வலது கையை பலமாகக் கடித்தது. குரங்கு தாக்கியதில் அப்பெண்ணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது.
கிம்மின் கையில் ரத்தம் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கிருந்த சிஐஎஸ் எப் படையினரும், தொல்லியல்துறை ஊழியர்களும் அங்கு வந்து பாதிக்கப்பட்ட கிம்மை முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த உடனடியாக அவசர ஊர்திக்கு (ஆம்புலன்ஸ்) சேவைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரமாகியும் அவசர ஊர்தி வரவில்லை. கிம்மிற்கும் தொடர்ந்து ரத்தக்கசிவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால், அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்தனர். அதன்படி, பேட்டரி கார் மூலமாக அப்பெண் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து தாஜ்மகால் வளாகத்தில் நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவது சுற்றுலாப் பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், குரங்கின் இந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
