ஐஐடியில் சேர்க்கை கிடைக்கவில்லை; இணையதளத்தை 'ஹேக்' செய்தார் மாணவர்

சென்னை: கான்பூர் ஐஐடியின் பிடெக் சைபர் செக்யூரிட்டி பிரிவில் சேர்க்கை கிடைக்காத மாணவர், ஐஐடியின் இணையதளத்தை கைப்பற்றி முடக்கினார். ஆனால், அவர் மீது போலீசில் புகார் அளிக்காத ஐஐடி நிர்வாகம், அவர் அடுத்தாண்டு சேர்க்கைக்கு முயற்சிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கான்பூர் ஐஐடியின் பிடெக் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு சேர்க்கையில் பங்கேற்ற மாணவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்பட்டன. ‘எத்திக்கல் ஹேக்கிங்’ செய்து மாணவர்கள், தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போது திறன் நிரூபித்த மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்பட்டது.

அதில் சேர்க்கை கிடைக்காத மாணவர் ஒருவர், தன் திறமையை காட்டுவதற்காக கான்பூர் ஐஐடியின் இணையதளத்தை ஹேக்கிங் செய்து கைப்பற்றினார். ‘எனக்குத் தேவை ஒரு நியாயமான வாய்ப்பு மட்டுமே’ என்ற செய்தியை இணையதளத்தில் பதிவும் செய்தார்.

அதன் ஸ்கிரீன் ஷாட்டை, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இணையதளம் யாரோ ஒருவரால் கைப்பற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஐஐடி நிர்வாகம், போலீசில் புகார் அளிக்க முயற்சித்தது.

ஆனால், சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவர் தான் இவ்வாறு செய்துள்ளார் என்பதை பின்னர் புரிந்து கொண்டதும், முடிவை மாற்றிக் கொண்டது. அந்த மாணவரை தங்களது சைபர் செக்யூரிட்டி மையத்தில் பணி அமர்த்த முடிவு செய்த ஐஐடி நிர்வாகம், அவரை அடுத்தாண்டு சேர்க்கைக்கு முயற்சிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

‘உடனடியாக அவருக்கு சேர்க்கை வழங்குவது, வாய்ப்புக்காக இணையதளத்தை ஹேக் செய்ததை நியாயப்படுத்துவது போலாகி விடும். அதே வேளையில் போலீசில் புகார் அளித்து அவரது எதிர்காலத்தை கெடுக்கவும் விரும்பவில்லை’ என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link