Pearle Maaney: 'மன்னிப்பு கேட்கிறேன்' ; சர்ச்சையினால் குறைந்த 3 லட்சம் ஃபாலோயர்ஸ் – பின்னணி என்ன?

தொகுப்பாளினி பேர்லே மானி, திரை நட்சத்திரங்களுடன் அவர் செய்யும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நேர்காணல்களுக்குப் பெயர் போனவர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மாணவர்களின் போராட்டம் குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர், “தயவுசெய்து காயம் அடைந்துவிடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து என்றால், வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.

Pearle Maaney

எந்த ஒரு காரணத்திற்காகவும் உயிரை இழப்பது ஈடாகாது. அதே நேரத்தில், இந்த இயக்கத்தின் மூல நோக்கம் எக்காரணத்தைக் கொண்டும் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் நம்புகிறேன். நமது முழு கவனமும் எப்போதும் மாணவர்களின் மீதும், அவர்களின் எதிர்காலத்தின் மீதும் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

இதற்காக சமூக வலைத்தளப் பக்கங்களில் பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளானார் பேர்லே மானி.

அத்தோடு, இவர் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்போது, மூத்த மலையாள சினிமா இயக்குநர் சிபி மலயிலைத் தோல்வியடைந்த இயக்குநர் எனக் குறிப்பிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. பேர்லே மானி விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்போது, “என் பதிவுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டும் போல. இது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நான் அமைதி, பாதுகாப்பை விரும்புவது இத்தனை பேருக்குக் கோபத்தை உண்டாக்கியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு ‘தோல்வியடைந்த இயக்குநர்’ நான் போட்ட 4 பக்கப் பதிவிற்குப் பதிலாக 10 பக்கத்திற்குத் திரைக்கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.

அதில் காரப்பொடியையும் அஜினோமோட்டோவையும் சேர்த்து எவ்வளவு ஆரோக்கியமற்றதாக மாற்ற முடியுமோ, அதை அவ்வளவு மாற்றுகிறார். எனக்குப் பிடித்த நிறம் காவி. நமது இந்தியத் தேசியக் கொடியில் இருக்கும் காவி நிறத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

Pearle Maaney
Pearle Maaney

பேர்லே மானியின் இந்தப் பதிவில் பயன்படுத்தியிருந்த ‘தோல்வியடைந்த இயக்குநர்’ என்ற வார்த்தை, மலையாள திரையுலகின் மூத்த இயக்குநர் சிபி மலயிலைக் குறிப்பிடுவதாக, அவருடைய மகன் ஜோ சிபி மலயில் பதில் தந்திருக்கிறார். அவர், “நீங்கள் குறிப்பிட்ட அந்த ‘தோல்வியடைந்த இயக்குநர்’ வேறு யாருமில்லை, என் தந்தைதான்.

யாருடன் பேசுகிறீர்கள் என்பதை முதலில் சரியாகத் தெரிந்துகொண்டு பேசுங்கள். 7 பக்கங்களைப் படிக்க உங்களுக்கு அவ்வளவு சோம்பேறித்தனமா? உங்கள் அரைகுறை ராஜதந்திரத்தை உங்கள் 5.7 மில்லியன் ஃபாலோயர்கள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களுக்கு, 7 பக்கங்களைப் படிப்பது அவ்வளவு பெரிய விஷயமா?

இதை நீங்கள் தனிப்பட்டத் தாக்குதலாக மாற்றியதால், ஆட்டத்தை இப்போது தொடங்குவோம். அந்த ‘தோல்வியடைந்த இயக்குநர்’ முதுகெலும்பில்லாத ஒரு மகனை வளர்க்கவில்லை” எனக் காட்டமாகப் பதில் கொடுத்திருந்தார்.

இந்த விஷயம், சமூக வலைத்தளப் பக்கங்களில் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கிறார் பேர்லே மானி. அந்தக் காணொளியில் அவர், “நான் பதிவிட்ட விஷயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, நான் நினைக்காத அர்த்தங்கள் அதற்குப் கற்பிக்கப்பட்டன.

நான் இரவு 11 மணிக்குத் தான் அதைப் பதிவிட்டேன். நாம் எதைப் பதிவிட்டாலும் சிலர் நல்ல கோணத்திலும், சிலர் கெட்ட கோணத்திலும் பார்ப்பார்கள். பெரும்பாலானோர் நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டனர்.

ஆனால், சில நிமிடங்களிலேயே நான் கற்பனை கூட செய்து பார்க்காத வகையில் கமெண்ட்டுகள் வரத் தொடங்கின.

Director Sibi Malaiyil
Director Sibi Malaiyil

நீட் போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோக்களைப் பார்த்த பிறகே நான் அதைப் பதிவிட்டேன். ‘வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று நான் கூறியது, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே தவிர, போராட்டத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள் என்று சொல்வதற்கு நான் யார்?

இயக்குநர் சிபி மலயில் சார் பற்றி நான் ஒருபோதும் அப்படிப் பேசமாட்டேன். அவர் மலையாள சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். நான் அவருடைய தீவிர ரசிகை.

சார், நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. ‘தோல்வியடைந்த இயக்குநர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உண்மையிலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நான் தவறென சொல்லவில்லை.

கருத்து தெரிவிக்க அனைவருக்கும் இங்கு உரிமை இருக்கிறது. என்னுடைய பதிவிற்கு பின்னிருக்கும் உண்மையை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த சர்ச்சையினால் பேர்லே மானியின் இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குறைந்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அதேபோல், பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவருடைய ஃபாலோயர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதாம்.

Source link