AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் – நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA – Chennai Unified Metropolitan Transport Authority ) டெண்டர் வெளியிட்டுள்ளது.

தற்போது புதிய சாலைத் திட்டங்களை செயல்படுத்தும்போது, எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட அதிகாரிகள் GIS வரைபடங்கள், நில உரிமை ஆவணங்கள், வருவாய்த் துறை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் திட்டமிடல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.

சாலை பணிகள்

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து நில விவரங்களையும் ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் ஒருங்கிணைக்கும் Web GIS தளத்தை உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே PDF மற்றும் AutoCAD (DWG) வடிவில் உள்ள சாலை வரைபடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானாக அடையாளம் கண்டு, அவற்றை டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.

இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், புதிய சாலைத் திட்டங்களுக்கு தேவையான நிலத்தின் பரப்பளவு, கையகப்படுத்தும் செலவு, பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட தகவல்களை மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் திட்டமிடல் வேகமடைவதுடன், நிலம் கையகப்படுத்தும் செலவையும் முன்கூட்டியே மதிப்பிட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, AI உதவியுடன் PDF மற்றும் DWG வரைபடங்களில் உள்ள தகவல்களை டிஜிட்டல் தரவுகளாக மாற்றுவதன் மூலம் திட்டத் தாமதங்களை குறைத்து, சாலை உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக நிறைவேற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA, சென்னை மாநகர எல்லையை மட்டுமல்லாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) வரம்பிற்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போக்குவரத்து மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link