மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாடிவயல் – கோவை குற்றாலம் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து அருவியில் நீராடி மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு ஆபத்தான அளவைக் கடந்து சீறிப்பாய்ந்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அதிரடியாக அறிவித்துள்ளார்.#Coimbatorepic.twitter.com/U7g6txuhmU
— Indian Express Tamil (@IeTamil) July 29, 2026
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளுக்குப் பேராபத்து ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வெளியிட்ட அவசர அறிவிப்பில்,
“பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29/07/2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென அருவி மூடப்பட்டதால், இன்று கோவை குற்றாலத்திற்கு ஆர்வத்துடன் வருகை தந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
