“ஆந்திராவில் பா.ம.க. தொடங்கப்படும்” – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

பாமகவின் 38வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (29.07.2026) நடைபெற்றது. இதற்கான கூட்டம் தொடங்கியவுடன், கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அமைப்புத் தேர்தல் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதோடு கட்சியின் அமைப்புத் தேர்தல் விதிகளின்படி, கடந்த ஜூலை மாதம் முதல் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று, வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் குழுவானது, பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில்  பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். அங்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வருகின்ற சனிக்கிழமை, பனையூரில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெறுகிறது. 

ஆந்திராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 100 முக்கிய நபர்கள் வந்து சந்திக்கிறார்கள். இவை அனைத்தும் நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய முயற்சிகள். அதற்கு முக்கிய காரணம், நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை. என்னை உங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்து, என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை எந்தக் காலத்திலும் வீணாகாது. உங்களை நல்ல வழியில், நேர்மையான வழியில், நியாயமான வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதே என் கடமை. நம்முடைய மிகப்பெரிய பலம் நம்முடைய இலக்குகளும், கொள்கைகளும்தான். ஏனெனில், பல கட்சிகளுக்கு அவர்களின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பது கூட தெளிவாக இல்லை. ஆனால் நமக்கு அது தெளிவாக உள்ளது. 

ராமதாஸ் வகுத்துத் தந்த கோட்பாடுகள், கொள்கைகள், செயல்திட்டங்கள், தொலைநோக்கு சிந்தனைகள் ஆகியவையே நம்முடைய உண்மையான பலம். நம்மிடம் தெளிவான திட்டங்களும் செயல்படுத்தும் திறனும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடைமுறைப்படுத்த முடியும். உதாரணமாக, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற திட்டங்களை அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே செயல்படுத்தச் செய்யலாம். அதேபோல், நமது ஆட்சி அமைந்தவுடன் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார். 

Source link