ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது. முதலில், இளம் பௌலர்களுடன் இத்தொடருக்கு செல்ல பிசிசிஐ முடிவு செய்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், இளம் பௌலர்கள் சொதப்பியதால், மீண்டும் சீனியர் பௌலர்களிடமே செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கம்பீர் எதிர்ப்பு: இந்த முடிவுக்கு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்திய ஒருநாள் அணியில் சீனியர் பௌலர்களை சேர்க்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்து, அவர்களை அணியிலும் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, பவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோரை மீண்டும் ஒருநாள் அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
எந்த தொடர்? மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்த மூன்று சீனியர் பௌலர்களை சேர்க்க உள்ளனர். இத்தொடர், செப்டம்பர் 27 முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும். இதே நேரத்தில், ஏசியன் கேம்ஸ் தொடரும் நடக்க உள்ளது. இத்தொடரில், டி20 பார்மெட்டில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும். இதனால், ஏசியன் கேம்ஸ் தொடரிலும் ஆடும் ஹர்ஷித் ராணா, பும்ரா, அர்ஷ்தீப் சிங் போன்றவர்களால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆட முடியாது.
இதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் குர்நூர் பிரார், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா போன்றவர்களை சேர்க்க வேண்டும் என பிசிசிஐக்கு தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்தார்.
ஆனால், அந்த கோரிக்கையை பிசிசிஐ நிர்வாகிகள் ஏற்க மறுத்துள்ளனர். மேலும், சீனியர் பௌலர்கள் புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, முகமது ஷமி ஆகியோரை சேர்த்து, அவர்களது திறமையை பரிசோதிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஒருவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில், மூன்று பௌலர்களும் அபாரமாக செயல்படும் பட்சத்தில், இவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரால் மிரட்டலாக பந்துகளை ஸ்விங் செய்ய முடியும். மேலும், க்ருணால் பாண்டியாவால் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியும். இதனால்தான், மூன்று பேரையும் இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
டெஸ்ட் அணியிலும்: மேலும், பலவீனமாக இருக்கும் இந்திய டெஸ்ட் அணியை பலப்படுத்த புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரையும் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகு, சீனியர்களை ஓரங்கட்டி, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. சீனியர் வீரர்கள் அதிகம் அணியில் இருந்தால், தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதால்தான், கம்பீர் சீனியர் வீரர்களை புறக்கணிக்கிறார் என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்நிலையில், இளம் வீரர்களை மட்டும் தேர்வு செய்து வரும் நிலையில், இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று அணிகளும் தொடர்ச்சியாக படுமோசமாக செயல்பட ஆரம்பித்துள்ளது.
