புதுடில்லி: நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியருடன் இயங்கி வருகின்றன. ஆந்திராவில் அதிகபட்சமாக 16,357 பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே உள்ளனர்.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த அமைப்பானது, நாட்டில் உள்ள பள்ளிகளை பற்றிய ஒரு தரவுத்தளம் ஆகும். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பானது, 2025-26ம் ஆண்டில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நாட்டில் 1 லட்சத்து 843 பள்ளிகள் ஓராசிரியர்களுடன் இயங்கி வருகிறது. இதில் ஆந்திர பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு அதிகபட்சமாக 16,357 பள்ளிகள் ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகிறது. ஒட்டு மொத்த தேசிய சராசரியில் இது 16க்கும் அதிகமான சதவீதம் ஆகும்.
ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா முறையே 2 மற்றும் 3வது இடத்தில் உள்ளது. ஜார்க்கண்டில் 9,827 பள்ளிகளும், மஹாராஷ்டிராவில் 9,269 பள்ளிகளிலும் ஓராசிரியர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் 8,042, உத்தரபிரதேசத்தில் 7,874, ராஜஸ்தானில் 7,200, மேற்கு வங்கத்தில் 6,769 பள்ளிகள் ஓராசிரியருடன் இயங்கி வருகின்றன. இந்த 7 மாநிலங்களும் ஒட்டு மொத்த தேசிய சராசரியில் 65 சதவீதத்தை பிடித்துள்ளன.
தெலுங்கானாவில் 4,793, தமிழகத்தில் 3,957, அசாமில் 3,159 பள்ளிகள் ஓராசிரியர்களுடன் இயங்கி வருகின்றன. ஹிமாச்சலில் 3,128, உத்தராகண்டில் 2,655, சத்தீஸ்கரில் 2,461 பள்ளிகள் ஓராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கேரளாவில் 67 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன. நாகாலாந்தில் 35, சிக்கிமில் 31, லடாக்கில் 28, டில்லியில் 7 மற்றும் அந்தமான் நிகோபர் தீவில் 1 பள்ளியும் ஓராசிரியருடன் இயங்கி வருகின்றன.
