ஏமாற்றுவதில் பலே கில்லாடி… அதிர்ந்து போன கிரிக்கெட் உலகம்: யார் இந்த கிளிக்கி பாண்டிங்?

இங்கிலாந்தின் கிளப் கிரிக்கெட்டில் பெரும் மோசடி சர்ச்சை வெடித்துள்ளது. நார்த் யார்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் கிரிக்கெட் லீக் இரண்டாம் பிரிவு போட்டியில், சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் 2வது லெவன் மற்றும் நார்டன் கிரிக்கெட் கிளப் 2வது லெவன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் 2வது லெவன் அணியைச் சேர்ந்த ஸ்லிப் ஃபீல்டர் பிரையன் டிவைன் என்பவர், பேட்மேன் பந்தை சுழற்றி அடிக்கும் போது, பேட்டில் எட்ஜ் ஆகும் சத்தத்தை தனது விரல் மூலம் வெளிப்படுத்துகிறார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

அதாவது, பந்து சரியாக பேட்டில் பட வரும் போது இடது கை விரல் மூலம் அந்த சொடக்கு சத்தம் எழுப்புகிறார். பந்தை கீப்பரா அல்லது வேறு ஃபீல்டர்களோ பிடித்தவுடன் அவுட் என அப்பீல் செய்கிறார்கள். உடனே நடுவர் பந்து பேட்டில் பட்டதாக நினைத்து அவுட் என தனது விரலை உயர்த்துகிறார். இதே பாணியை கடந்த சில போட்டிகளில் கடைப்பிடித்து பல பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி வெளியேற வைத்திருக்கிறார் ஸ்லிப் ஃபீல்டர் பிரையன் டிவைன். 

வைரலாகும் வீடியோ 

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகி வரும் ஒரு வீடியோவில், விக்கெட் கீப்பர் ஸ்டம்புகளுக்கு அருகில் நிற்க, பேட்ஸ்மேன் ஒருவர் பந்தை அடிக்க முயன்று தவறவிடுகிறார். கீப்பர் அதைப் பிடிக்க, நடுவர் தன் விரலை உயர்த்தியதும், பேட்ஸ்மேனைச் சுற்றியுள்ள ஃபீல்டர்கள் கொண்டாடத் தொடங்குகிறார்கள். குழப்பமடைந்த பேட்ஸ்மேன் தலையை அசைத்து, ஸ்லிப் ஃபீல்டரைச் சுட்டிக்காட்டுகிறார். அதற்குள் அவர் அவுட் என நடுவர் கூறி விடுகிறார். இதனால், பேட்ஸ்மேன் உண்மையில் பந்தை அடித்தாரா அல்லது ஸ்லிப் ஃபீல்டர் ‘நிக்’ என்ற சத்தத்தைப் போல விரல்களைச் சொடுக்கினாரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். 

மோசமான ஏமாற்று வேலை

பென் மம்மரி என்கிற பயனர் தனது எக்ஸ் தள பக்கத்தில் “சால்ட்பர்ன் கிரிக்கெட் கிளப் அணியின் முதல் ஸ்லிப் (first slip) வீரர் பந்து பேட்டில் பட்டது போன்ற ஒலியை உருவாக்கத் தன் விரல்களைச் சொடுக்கினார்; ஆனால் பந்து பேட்டிற்கு அருகிலேயே வரவில்லை, ஆனாலும் அவுட் வழங்கப்பட்டது. கிரிக்கெட்டில் நான் பார்த்ததிலேயே இது மிக மோசமான ஏமாற்று வேலை. சொல்லப்போனால், அந்த அணியின் விக்கெட் கீப்பர் இந்த சீசனில் ஏராளமான கேட்சுகளைப் பிடித்திருப்பதாகத் தெரிகிறது.” என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொரு பயனர் வெளியிட்ட பகுப்பாய்வு ஒன்றின்படி, ஸ்லிப் ஃபீல்டர் பிரையன் டிவைன் சால்ட்பர்ன் அணியின் ஆடும் லெவனில் இருந்தபோது சால்ட்பர்ன் அணியின் விக்கெட் கீப்பர் 39 கேட்சுகளை எடுத்திருந்தார் என்றும், ஆனால் பிரையன் டிவைன் இல்லாத ஐந்து போட்டிகளில், அத்தகைய முறையில் நிகழ்ந்த ஐந்து அவுட்கள் மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

 எப்போது முதல் இந்த மோசடி நடக்கிறது? 

கடந்த வாரம் நடைபெற்ற தங்களது இரண்டாவது லெவன் போட்டியில் சால்ட்பர்ன் சிசி அணி, நார்டன் சிசி அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அன்று முதல், பந்து பேட்டுக்கு அருகில் செல்லும்போது தனது விரல்களைச் சொடுக்கி ஆட்டமிழக்க செய்து வருகிறார் ஸ்லிப் ஃபீல்டர் பிரையன் டிவைன். அவர் இப்படி செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருவதைத் தொடர்ந்து, அவரை தற்போது ‘கிளிக்கி பாண்டிங்’ என்று நெட்டிசன்கள் அழைத்து வருகிறார்கள். 

ராய்ட்டர்ஸின் செய்திக் குறிப்பின் படி, சால்ட்பர்ன் அணி ஷில்டன் ரயில்வே சிசி அணிக்கு எதிராக விளையாடிய முந்தைய போட்டியில், இரண்டாம் நிலை அணியின் விக்கெட் கீப்பர் எட்டு கேட்சுகளைப் பிடித்துள்ளார். இது டெஸ்ட் போட்டிகளில் எடுக்கப்பட்ட 7 கேட்ச்களை விட அதிகமாகும். மேலும் இந்த சீசனில் அவர் விளையாடிய எட்டு ஆட்டங்களில், ஒரு போட்டிக்கு 4 கேட்ச்கள் இப்படி பிடிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. 

ஜூன் மாதம் சால்ட்பர்ன் அணியிடம் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டியில் மிடில்ஸ்பரோ சிசி அணியின் இரண்டாம் நிலை அணிக்குத் தலைமை தாங்கிய ரோரி கோட்டரில், கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அந்தப் போட்டியிலும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டதாகக் கூறினார். அதே வீரர் தனது விரல்களைச் சொடுக்குவது போன்ற ஒரு வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார், அதற்குக் கருத்துத் தெரிவித்தவர்கள் அதை அவதூறானது என்று வர்ணித்தனர்.

நடவடிக்கை உறுதி 

இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், நார்த் யார்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் கிரிக்கெட் லீக் நிர்வாகம் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக நார்த் யார்க்ஷயர் மற்றும் சவுத் டர்ஹாம் கிரிக்கெட் லீக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனிக்கிழமை, 25 ஜூலை 2026 அன்று நடைபெற்ற ‘டிவிஷன் 2’ (இரண்டாம் பிரிவு) ஆட்டம் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து லீக் நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமான புகார் ஒன்று கிடைத்துள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது; அதிகாரப்பூர்வ நடைமுறைகள் நிறைவடையும் வரை இது குறித்து வேறு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link