புதுடில்லி: இந்திய – சீன எல்லையில். சாலை வசதி இல்லாத 134 கிராமங்களை இணைக்கும், 2,482 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பார்லிமென்டின் லோக்சபாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய – சீன எல்லைப் பகுதியில் சாலை வசதி இல்லாத, 134 கிராமங்களுக்கு, அனைத்து காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலை இணைப்பை வழங்கும் வகையில், ‘துடிப்பான கிராமங்கள் திட்டம்’ கீழ் 2,481.93 கோடி ரூபாய் மதிப்பிலான 111 திட்டங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், நாடு முழுதும் 528 கிராமங்கள், ‘4 ஜி’ மொபைல் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன; 625 கிராமங்களில் குழாய் வழி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 621 கிராமங்களுக்கு மின்சார கட்டமைப்பு வாயிலாக மின்வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ், 140 சூரியசக்தி திட்டங்களுக்கும், ஏழு நுண்நீர்மின் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மின் வினியோக கட்டமைப்பு வலுப்படுத்துவதற்கான 238.30 கோடி ரூபாய் மதிப்பிலான 43 திட்டங்களுக்கு மின்சார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்துக்கு 40 நடமாடும் மருத்துவ பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், பள்ளி உள்கட்டமைப்பை உருவாக்கும் 146 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
