100 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முளைப்பாரித் திருவிழா; கிராம மக்கள் கோலாகல கொண்டாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் எழுந்தருளியுள்ளது. இந்தக் கோயிலில் 5 தலைமுறைக்கு முன்னர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாக்கள் இல்லாமல் நேர்த்திக்கடன் உள்ள கிராம மக்கள் மட்டும் சென்று வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், கிராமத்தில் உள்ள மற்ற கிராம தெய்வங்களுக்கு திருவிழா நடத்தி சிறப்பு வழிபாடுகள் செய்வது போல கிராம காவல் தெய்வமாக உள்ள பிடாரியம்மனுக்கும் முளைப்பாரி, மது எடுத்து சிறப்பு வழிபாடுகள் நடத்த கிராமத்தில் முடிவெடுக்கப்பட்டது. கிராமத்தின முடிவின்படி முளைப்பாரி, மது எடுப்பு நடத்த வேண்டும் என்ற நிலையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எந்தந்த இடங்களில் வைத்து வழிபாடுகள் நடத்தி மண்ணடித்திடல் எங்கே இருந்தது என்று வயது முதிர்ந்தவர்களிடம் கேட்டறிந்து அந்த இடங்களை கண்டறிந்து அதன் பிறகு முளைப்பாரி எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய் கிழமை கோயில் பொது முளைப்பாரிக்கு விதை தூவப்பட்ட பிறகு புதன் கிழமை செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் அனைவரும் விதை தூவி வீட்டிற்குள் வைத்து முளைப்பாரியை பாதுப்பாக வளர்த்து வந்தனர். இன்று 29 ந் தேதி புதன் கிழமை மாலை கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கும்மியாட்டத்துடன் முளைப்பாரி தூக்கி வந்து மண்ணடித்திடலைச் சுற்றி பிடாரி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டு அருகில் உள்ள குளத்தில் முளைப்பாரியை விட்டுச் சென்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த முளைப்பாரித் திருவிழாவை கிராம மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Source link