நமது டில்லி நிருபர்
லோக்சபா இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக சபை முடங்கியது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ல் துவங்கியது. கடந்த 1ல், 2026 – 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
பிரதமர் மோடியை உரையாற்ற விடாமல் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் பிரதமர் மோடியின் உரையின்றி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கம் போல லோக்சபா இன்று (பிப்.,06) காலை கூடியது.
8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு, இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியால் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நீடித்தது.
சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கே ட்கவில்லை. அமளி தொடர்ந்ததால் இன்று 12 மணி வரை சபையை ஒத்திவைத்தார். அதேநேரத்தில் காலை 11 மணிக்கு ராஜ்யசபா கூடியது. அங்கு அலுவல் நடந்து வருகிறது. மசோதாக்கள் மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.
