புதுக்கோட்டை: ”த.வெ.க., தலைவர் விஜய், தோல்வி பயம் காரணமாகவே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அந்த இரண்டிலுமே, அவருக்கு தோல்வி உறுதி” என, கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வில் 60 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 164 தொகுதிகளுமே வெற்றி பெறக்கூடிய இடங்கள். 11 இடங்களில், எங்கள் தோழமைக்கட்சிகள், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 175 இடங்களில் உதயசூரியன் போட்டியிடுகிறது.
எங்கள் இலக்கு 200 தொகுதிகள். நான்கு முனை போட்டி காரணமாக இருநூறையும் தாண்டி வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு, தேர்தலில் வெற்றி பெறுவோமா என்ற சந்தேகமும் பயமும் உள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அங்கு தோற்று விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் தான், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஆனால், அந்த இரண்டிலும் விஜய்க்கு தோல்வி உறுதி. தி.முக., கூட்டணி, உடைந்த கண்ணாடி என்று சொல்கிறார் விஜய்.
ஆனால், அவர்களே முகத்தை பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு சிறந்த கண்ணாடிதான் எங்கள் கூட்டணி. அப்படியொரு கூட்டணியை தான் முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். புதுக்கோட்டை என்றைக்குமே காவி கோட்டையாக மாறாது; உதயசூரியன் கோட்டையாகவே என்றைக்கும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
