தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (எம்.எஸ்.எம்.இ) அமைச்சர் பெ. மதன்ராஜா, 2026-27-ம் ஆண்டிற்கான துறை சார்ந்த மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய புதிய திட்டங்களையும் அறிவிப்புகளையும் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (1.09.2026) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா அறிவிப்புகளை வெளியிட்டார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க மேம்பாட்டிற்காக, ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டட வளாகம், நிர்வாக அலுவலக வளாகம், மேம்படுத்தப்பட்ட பாம்பு பராமரிப்புக் கூடம் மற்றும் பாம்பு விஷம் பிரித்தெடுத்தலுக்கான நவீன ஆய்வகம் ஆகியவை உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பால் அப்பகுதியில் உள்ள இருளச் சமூக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மகளிர் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் சென்னை-மாதவரம் (273 ஏக்கர் – ரூ.115.43 கோடி), மதுரை-திருவாதவூர் (1.30 ஏக்கர் – ரூ.17.44 கோடி), திருச்சிராப்பள்ளி-சூரியூர் (10 ஏக்கர் – ரூ.3.13 கோடி), மணப்பாறை (15 ஏக்கர் – ரூ.15.60 கோடி), சேலம்-பெரியசீரகப்பாடி (15 ஏக்கர் – ரூ.18.30 கோடி), திருப்பத்தூர்-மின்னூர் (8.25 ஏக்கர் – ரூ.8.64 கோடி), தூத்துக்குடி-சங்கராப்பேரி (10 ஏக்கர் – ரூ.3.70 கோடி) மற்றும் திருநெல்வேலி-நரசிங்கநல்லூர் (15 ஏக்கர் – ரூ.7.13 கோடி) உள்ளிட்ட 9 இடங்களில் புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மதன்ராஜா அறிவித்தார்.
மேலும், இந்த திட்ட மதிப்பீடுகளில் அமைக்கப்படும் தொழிற்பூங்காக்கள் மூலம் சுமார் 5,000 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.
அதிக வாய்ப்புள்ள துறைகளில் 1,000 புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் ரூ.9.19 கோடி நிதியமைப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மதன்ராஜா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் 6 முன்னோடி தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் இந்த திட்டங்கள் அனைத்தும் முறைப்படி முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் மதன்ராஜா தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மானியம் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா அறிவித்துள்ளார். இத்தொகை ஒதுக்கீட்டின் மூலம் மாநிலத்தில் இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிதிச் சுமை வெகுவாகக் குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
