சென்னையில் 5 ‘ஹைவே’க்களை இணைக்கும் பிரம்மாண்ட 6 வழிச் சாலை: 120 கி.மீ வேகத்தில் பறக்கலாம்; 2-ம் பகுதி பணிக்கு நிலம் எடுப்பு தீவிரம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சுமார் ₹17,958 கோடி மதிப்பீட்டில் 133.64 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவு 6 வழி சென்னை வெளிவட்டச் சாலை (CPRR – Chennai Peripheral Ring Road) திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகள், மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்தே செல்ல வேண்டியுள்ளது. இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வாக, வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழையாமலேயே வெளிப்பகுதிகள் வழியாக எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை அடையும் வகையில் இந்த வெளிவட்டச் சாலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் அமைக்கப்படும் இச்சாலை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை, சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலை, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஈ.சி.ஆர் சாலையை இணைக்கிறது. இதன் மூலம் ஆந்திரா, கர்நாடகா, வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் பாலமாக இது அமையும். தற்போது மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்பட்டு, எண்ணூர் துறைமுகத்திற்குச் சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல வழிவகுக்கும்.

மொத்தம் 133.64 கி.மீ நீளம் கொண்ட இந்தத் திட்டம் 5 கட்டங்களாகச் செயல்படுத்தப்படுகிறது. எண்ணூர் துறைமுகம் (காட்டுப்பள்ளி) முதல் தச்சூர் வரை (25 கி.மீ), தச்சூர் முதல் திருவள்ளூர் வரை (26 கி.மீ), திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை (24 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள்கோவில் வரை (27 கி.மீ), சிங்கபெருமாள்கோவில் முதல் மாமல்லபுரம் (பூஞ்சேரி) வரை (30 கி.மீ) இதில் 1 முதல் 3 வரையிலான கட்டப் பணிகள் (சுமார் 82 கி.மீ) ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் OPEC நிதியுதவியுடன் சுமார் ரூ.12,375.59 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தச்சூர் – திருவள்ளூர் புறவழிச்சாலை இடையிலான 26 கி.மீ தூர பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தகட்ட பணிகளுக்காக ஏக்காடு கண்டிகை பகுதியில் நிலம் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆட்சேபனை உள்ள நில உரிமையாளர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கிளை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – சிங்கபெருமாள்கோவில் வழித்தடம் முழுமையாக நிறைவடைந்து, சர்வீஸ் சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கபெருமாள்கோவில் – மாமல்லபுரம் பகுதியிலும் நில எடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

கட்டமைப்புச் சிறப்பம்சங்கள் என்ன?

8 பெரிய பாலங்கள், 7 சிறிய பாலங்கள், 2 ரயில்வே பாலங்கள், 76 சிறுபாலங்கள் (Culverts), அனைத்து வாகனங்களுக்குமான 1 சுரங்கப்பாதை, இலகுரக வாகனங்களுக்கு 3 சுரங்கப்பாதைகள், சிறிய வாகனங்களுக்கு 11 சுரங்கப்பாதைகள், 4 லாரி பார்க்கிங் பகுதிகள் மற்றும் 10 பேருந்து நிறுத்தப் பகுதிகள், பக்கிங்காம் கால்வாய் மீது இரும்புப் பாலம் அமைத்து ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) சாலைகளை இணைக்கும் புதிய சாலையும் அமைக்கப்பட உள்ளது.

படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைகளை கிழக்கு தகவல் தொழில்நுட்ப வழித்தடத்துடனும் (IT Corridor) அண்டை மாநிலங்கள் உடனும் இச்சாலை எளிதாக இணைக்கும். கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் வெளியே செல்வதால் நகரின் காற்று மாசுபாடு, சத்தம் மற்றும் எரிபொருள் விரயம் வெகுவாகக் குறையும். மேலும், 132 கி.மீ நீளச் சாலையின் இருபுறமும் புதிய தொழிலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாகி சென்னைப் பெருநகரப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link