ராஜேஷ்குமார் சர்ச்சை பேச்சு; முதல்வர் விஜயிடம் மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி சமாதானம்

– நமது நிருபர் –

அமைச்சர் ராஜேஷ்குமார் பேச்சு, த.வெ.க., – காங்., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், ராஜ்யசபா எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர், முதல்வர் விஜயை சந்தித்து பேசிய பின், பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜயை, தலைமைச்செயலகத்தில், நேற்று(ஆக.,31) மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இதுகுறித்து, தமிழக காங்., நிர்வாகிகள் கூறியதாவது:தனியார் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில், பிரதமர் பதவிக்கான தலைவர்களில், மோடி, ராகுல் ஆகியோருக்கு அடுத்த இடத்தில், விஜய் இருப்பதாக தகவல் வெளியானது. அதைத்தொடர்ந்து, த.வெ.க., தரப்பில் முதல்வர் விஜயை, வருங்கால பிரதமர் என்று அழைக்கத் தொடங்கினர். இதுதொடர்பாக, த.வெக., கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, காங்., அமைச்சர் ராஜேஷ்குமார், ‘இண்டி கூட்டணி வேட்பாளர் ராகுலை, த.வெ.க., ஆதரிக்க வேண்டும். இல்லையெனில் கூட்டணியில் இருந்து விலகுவோம்; இரண்டு அமைச்சர்களும் பதவியை துறப்போம்’ என, எச்சரித்தார். இது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜயை சந்தித்து பேச, காங்., பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, மூவரின் சந்திப்பு நடந்தது. அப்போது, த.வெ.க., – காங்., கூட்டணியின் ஒற்றுமைக்கு, எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது. தொண்டர்கள் மத்தியில், வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை யாரும் பேச வேண்டாம் என, காங்., டில்லி மேலிடம் கூறியதை, முதல்வர் விஜயிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அதை ஏற்றுக்கொண்ட விஜய், ‘கூட்டணி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்’ என கூறியுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link