லிண்டா, அல்காரஸ் முன்னேற்றம் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்…

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு அல்காரஸ், லிண்டா, ஸ்வியாடெக் உள்ளிட்டோர் முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் ‘நம்பர்-3’ வீரர், ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ரோமன் ஷபியுல்லினை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என வென்ற அல்காரஸ், அடுத்த இரு செட்டுகளையும் 6-4, 6-4 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 22 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அல்காரஸ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

வாவ்ரின்கா தோல்வி

கடந்த 2016ல் இத்தொடரில் சாம்பியன் ஆன சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா 41, தனது கடைசி சீசனில் பங்கேற்கிறார். ‘வைல்டு கார்டு’ (சிறப்பு அனுமதி) முறையில் களமிறங்கிய இவர் முதல் சுற்றில் 6-7, 6-7, 0-6 என இத்தாலியின் பெர்ரெட்டினியிடம் தோல்வியடைந்தார்.

லிண்டா அபாரம்

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-6’, நடப்பு விம்பிள்டன் சாம்பியன், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, அமெரிக்காவின் கேட்டீயை (‘நம்பர்-78’) சந்தித்தார். முதல் செட்டை 7-5 என கைப்பற்றிய லிண்டா, அடுத்த செட்டை 6-1 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 37 நிமிடம் நடந்த போட்டி முடிவில் லிண்டா, 7-5, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

போலந்தின் இகா ஸ்வியாடெக் (‘நம்பர்-8’), 6-2, 6-3 என சீனாவின் வாங் ஜியை (80) வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ஜப்பானின் ஒசாகா, 7-6, 7-6 என ரஷ்யாவின் ஜகரோவாவை வென்றார்.

பிற போட்டிகளில் சினியகோவா (செக் குடியரசு), சர்ஸ்டீயா (ருமேனியா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

பெடரருக்கு மோதிரம்

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 45. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 பட்டம் வென்ற முதல் வீரர்.

ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 310 வாரம் முதலிடத்தில் இருந்த பெடரர், 2022ல் ஓய்வு பெற்றார். சமீபத்தில் டென்னிசில் சாதித்தவர்களுக்கான ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

நேற்று நியூயார்க் மைதானத்தில், இதற்கான சிறப்பு மோதிரத்தை, முன்னாள் பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ், பெடரருக்கு வழங்கினார்.

Source link