பின்னலாடை வாரியம் அமைத்தது அரசு ஜவுளி தொழில் துறையினர் வரவேற்பு

திருப்பூர்: ‘தமிழ்நாடு பின்னலாடை வாரியம் என்ற தனித்துவமான அமைப்பு உருவாக்கப்படும்,’ என்ற கைத்தறித்துறை அமைச்சரின் அறிவிப்பால், திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் பின்னலாடை தலைநகராக திருப்பூர் விளங்குகிறது. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 63 சதவீத பங்களிப்புடன் திருப்பூர் முன்னோடியாக உள்ளது. ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி, தொழிலாளர் நலன், தொழில்துறையினர் நலன்கருதி, பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் விஜய் பாலாஜி, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னலாடை தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசு பிரதிநிதிகள் மற்றும் தொழில் பங்களிப்போர் அடங்கிய, தமிழ்நாடு பின்னலாடை வாரியம் என்ற தனித்துவமான அமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நீண்ட நாள் கோரிக்கையான, பின்னலாடை வாரியம் அமைக்கும் அறிவிப்பால், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் வாயிலாக, பஞ்சு – நுால் விலை உயர்வு உட்பட, அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவான தீர்வு கிடைக்கும். அத்துடன், வர்த்தகர் – உற்பத்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும், ஆடை உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

Source link