சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம்?: ஐகோர்ட் கேள்வி

தமிழகத்தில் சேவல் சண்டைப் போட்டிகளுக்கு முழுமையாகத் தடை விதித்துச் சுற்றறிக்கை வெளியிடுவதற்கு காவல்துறை டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோவில் திருவிழாக்களின் போது சேவல் சண்டைப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரி, ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், “தமிழகக் கிராமப்புறத் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் மற்றும் சேவல் சண்டை போன்ற பாரம்பரிய போட்டிகள் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகின்றன. காவல் துறை விதிக்கும் அத்தனை கட்டுப்பாடுகளையும் பின்பற்றி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடனேயே இப்போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதில் எவ்விதச் சூதாட்ட நோக்கமோ அல்லது விலங்குகளைத் துன்புறுத்தும் எண்ணமோ இல்லை. எனவே, கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேவல் சண்டைக்குத் தடை விதித்து டி.ஜி.பி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (01.09.2026) விசாரணைக்கு வந்தபோது, அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மிருக வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு மற்றும் மதுரை அமர்வுகள் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலேயே டி.ஜி.பி இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பொதுநல வழக்கு நிலுவையில் இருப்பதால், பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, “மாநிலத்தில் சேவல் சண்டைக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிபதி, “காவல் துறைக்கு சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்ட எத்தனையோ முக்கியப் பணிகள் இருக்கும்போது, எங்கு ஆடு சண்டை நடக்கிறது, எங்குச் சேவல் சண்டை நடக்கிறது என்று கண்காணிப்பதே முதன்மை வேலையா?” என்று அதிருப்தி தெரிவித்தார்.

முடிவில், இந்த மனு தொடர்பாக மாநிலக் காவல் துறை விரிவான பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை எதிர்வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Source link