ஆட்டம் காட்டும் ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் விலை

நேற்று காலை வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்த ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்கு, பின்னர் 1.57 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பங்கின் விலை 709 ரூபாயாக முடிந்தது.

வங்கியின் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யார் என்ற குழப்பம் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சி.இ.ஓ., சசிதர் ஜகதீசன் அக்டோபர் 26ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவர் மீண்டும் அந்த பதவிக்கு வர விருப்பமில்லை என தெரிவித்துள்ள நிலையில், புதிய சி.இ.ஓ.,வை விரைவாக நியமிக்க வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிய தலைமையால் வங்கியின் வளர்ச்சி வேகம் எப்படி இருக்கும் என்பதே முதலீட்டாளர்களின் முக்கிய கவலையாக உள்ளது. குறிப்பாக, வைப்பு தொகை வளர்ச்சி, கடன் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றில் புதிய நிர்வாகம் எவ்வாறு செயல்படும் என்பது கவனிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ஹெச்.டி.எப்.சி., நிறுவனம் வங்கியுடன் இணைந்த பிறகு ஏற்பட்ட சில சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சி.இ.ஓ., நியமனம் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. புதிய சி.இ.ஓ., விரைவாக நியமிக்கப்பட்டு, வங்கியின் வளர்ச்சி தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டால், தற்போதைய அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.

மாறாக, நியமனம் தாமதமானாலோ, புதிய நிர்வாகம் வளர்ச்சியை வேகப்படுத்துவதில் சவாலை சந்தித்தாலோ, பங்கில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நடப்பு 2026ல் இதுவரை ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்கு 27.30 சதவீதம் சரிந்துள்ளது. இதே காலத்தில் ‘நிப்டி 50’ குறியீடு 7.50 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது .

Source link