சில தினங்களுக்கு சேலத்தில் வீட்டு வேலை செய்து வந்த ஒரு பெண்மணி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு மூட்டைகளில் கட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் உடல் வீசப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாநகர் அரிசிப்பாளையம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கோயில் பூசாரியாக இருக்கும் இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது குடிநீர் குழாயை திறந்த போது தண்ணீர் பயங்கரமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியை பார்த்த போது, அதில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இரண்டு மூட்டைகளில் கட்டப்பட்டு இருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த புகாரின் அடிப்படிஅயில் காவல் துறையினர் மற்றும் தடவியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி சிசிடிவி கேமராக்கள் ஏதும் இல்லாத காரணத்தால் கொலை செய்யப்பட்டவர் யார்? யார் கொலை செய்தார்கள்? போன்ற விவரங்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த சூழலில், கைப்பற்றப்பட்ட அந்த உடலின் கையில் ஒரு பெயர் பச்சை குத்தி இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட பெண், அயோத்தியாபட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் இரண்டாவது மனைவி தங்கமணி (50) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தான், அப்பெண்ணை கொலை செய்தது என்பது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலை செய்து வந்த தங்கமணியிடம், 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் பழகியுள்ளார். அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் வேலை இருப்பதாக தங்கமணியை அழைத்துச் சென்ற அந்த பெண், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து 4 சவரன் தங்கச் செயினுக்காக தங்கமணியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பின்னர், தங்கமணியின் அணிந்திருந்த அந்த நகையை பறித்துக் கொண்டு அவரது தலை, கால், கை, மார்பு என 7 துண்டுகளாக வெட்டி இரண்டு மூட்டைகளில் கட்டி, ரமேஷின் வீட்டு மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
