தலித் கிறிஸ்தவர்களுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் அளித்த வாக்குறுதி; பா.ஜ.க எதிர்ப்பது ஏன்?

எழுதியவர்: சஜு பிலிப்

கேரளாவில் பா.ஜ.க-விற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக விளங்கும் கிறிஸ்தவ வாக்கு வங்கியைச் சிக்கலாக்கும் வகையில், தலித் கிறிஸ்தவர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீலிப்பதாக கேரள முதல்வர் வி.டி. சதீசன் சமீபத்தில் உறுதியளித்தார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க

சமூக சீர்திருத்தவாதி அய்யன்காளியின் 163-வது பிறந்தநாளை ஒட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய சதீசன், கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியலினத்தவர் ஆகிய இரு தரப்பினருக்கும் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இடஒதுக்கீடு தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இச்சமூகத்தின் பின்தங்கிய நிலையை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளைத் தனது அரசு கண்டறியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிக்கைக்கு பா.ஜ.க-வின் எஸ்.சி மோர்சா (SC Morcha) சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் மாநிலத் தலைவர் ஷாஜுமோன் வட்டேக்காட், சதீசன் தனது கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல்வர் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறார். எஸ்.சி சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைப் பறித்து தலித் கிறிஸ்தவர்களுக்கு நீட்டிப்பதே அவரது நடவடிக்கை என்றால், அவர் நெருப்போடு விளையாடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய வட்டேக்காட், அரசியலமைப்பால் எஸ்.சி சமூகத்திற்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தர்மம் அல்ல, அது அவர்களின் உரிமை என்றும் கூறினார். பா.ஜ.க எஸ்சி மோர்ச்சா, எஸ்சி சமூகத்தினரைத் திரட்டி அரசுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், செவ்வாய்க்கிழமை தனது பேஸ்புக் பதிவில், மதம் மாறுவது சாதி அடையாளத்தையும் சாதிய ஒடுக்குமுறையையும் நீக்கிவிட்டால், எஸ்.சி அந்தஸ்தை கோருவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று வாதிட்டார். கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடு நீடித்தால், அதை கிறிஸ்தவ சமுதாயமே முதலில் ஒப்புக்கொண்டு களைய வேண்டும் என்றார்.

இந்து ஐக்கிய வேதி மாநிலத் தலைவர் ஆர்.வி.பாபு, மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி இடஒதுக்கீட்டை நீட்டிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அரசு மத மாற்றத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டினார். இந்த வேதி என்பது கேரளாவில் உள்ள பல்வேறு சங்க பரிவார் அமைப்புகளின் ஒரு கொடை அமைப்பாகும். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ வாக்காளர்களை கவர பா.ஜ.க முயன்று வரும் சூழலில், பா.ஜ.க மற்றும் சங்க பரிவார் அமைப்புகளுக்குள் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலேயே இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

பா.ஜ.க கிறிஸ்தவ மக்களை சென்றடைவதற்கான சிக்கலான பிரச்சனை

தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, குறிப்பாக கேரளாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் பிரிவுகள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையினரிடையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. தலித் கிறிஸ்தவர்கள் பெருமளவில் வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட இந்து சமூகங்களின் வழித்தோன்றல்கள் ஆவர், இவர்கள் பின்னாளில் கிறிஸ்தவத்திற்கு மாறினர்.

1950-ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலினத்தவர்) உத்தரவின் கீழ், எஸ்.சி அந்தஸ்து என்பது இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சமூகங்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமே வரம்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு எஸ்.சி அந்தஸ்தை நீட்டிப்பதற்கான கோரிக்கைகளை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பரிசீலித்து வருகின்றன.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனை ஒரு அரசியல் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கட்சி சமீபத்திய ஆண்டுகளில் கேரளாவின் கிறிஸ்தவ சமூகத்தை அணுகுவதையும், தனது பாரம்பரிய இந்து ஆதரவுத் தளத்திற்கு அப்பால் தேர்தல் தளத்தை விரிவாக்குவதையும் தீவிரப்படுத்தியுள்ளது.

கட்சி சமூகத்தை அணுகுவதில் மதமாற்றப் பிரச்சனை ஒரு பெரிய தடையாக இருந்தது. கேரளாவில் கிறிஸ்தவ மக்கள் தொகை குறைந்து வருகிறது. எனவே மதமாற்றம் கட்சிக்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையில் தடையாக இருக்கக்கூடாது என்று பா.ஜ.க மாநிலத் தலைமையின் ஒரு பிரிவினர் வாதிட்ட பிறகு, அது கைவிடப்பட்டது. ஆனால் மதமாற்றப் பிரச்சனை பா.ஜ.க மற்றும் பரந்த சங்க பரிவாரங்களுக்குள் ஒரு பிளவு கோடாகவே இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு, மதமாற்றம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகளின் கீழ் சத்தீஷ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது, அந்தப் பதற்றங்களை வெளிக் கொண்டு வந்தாது. மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உட்பட கேரள பா.ஜ.க தலைவர்கள், கட்டாய மதமாற்றக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கட்சி கன்னியாஸ்திரிகளுக்கு உறுதுணையாக நிற்கும் என்று கூறினார்.

இருப்பினும், இந்த நிலைப்பாடு கேரளாவில் உள்ள சங்க பரிவாரங்களின் பிரிவுகளிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது. இந்த வழக்கை, ஒதுக்கப்பட்ட இந்து சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கிறிஸ்தவ அமைப்புகள் மதமாற்றம் செய்வதாகக் குற்றம் சாட்டி, அதற்கு ஓர் உதாரணமாக சுட்டிக்காட்டினர்.

எஃப்.சி.ஆர்.ஏ (FCRA) அமைதியின்மையை மீண்டும் தூண்டுகிறது

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, பின்னர் இணை நாடாளுமன்றக் குழுவின் (Joint Parliamentary Committee) பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 மூலம் இந்த விவாதம் இந்த ஆண்டு மீண்டும் உருவெடுத்தது.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து கிறிஸ்தவ அமைப்புகளின் கவலைகளைப் போக்க பா.ஜ.க தலைவர்கள் முயன்ற நிலையில், கேரளாவில் உள்ள இந்துத்துவ அமைப்புகளின் பிரிவினர், தேவாலயங்கள் பெறும் வெளிநாட்டு நிதியை கடுமையாக தணிக்கை செய்ய வேண்டும் என கோரினர், அத்தகைய நிதி மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினர்.

கேரளாவின் தலித் கிறிஸ்தவர்கள்

பல தலைமுறைகளுக்கு முன்பு முன்னோர்கள் மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் கேரளாவில் இந்தப் பிரச்சனை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. மதமாற்றம் அடைந்த போதிலும் சாதி அடிப்படையிலான சமூக மற்றும் பொருளாதார பின்னடைவுகளைத் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும், எனவே மற்ற மத சமூகங்களில் உள்ள தலித்துகளுக்குக் கிடைக்கும் அதே அரசியலமைப்புப் பாதுகாப்புகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் இச்சமூகம் வாதிட்டு வருகிறது.

பா.ஜ.க தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்த முயலும் மாவட்டங்கள் உட்பட, தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் கணிசமான எண்ணிக்கையிலான தலித் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். சிரிய-மலபார் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கோட்டயத்தில் குவிந்துள்ளனர், அதே சமயம் பெந்தேகோஸ்தே குழுக்கள் உட்பட கணிசமான கத்தோலிக்கரல்லாத சமூகங்கள் பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் காணப்படுகின்றன.

வரம்பிற்குட்பட்ட தேர்தல் வெற்றிகள்

கிறிஸ்தவ வாக்குகளைப் பெறுவதற்கான பா.ஜ.க-வின் முயற்சிகளில், கிறிஸ்தவ தலைவர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவது மற்றும் கணிசமான கிறிஸ்தவ மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில் கிறிஸ்தவ வேட்பாளர்களை நிறுத்துவது ஆகியவை அடங்கும். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் கிறிஸ்தவ வாக்காளர்களிடையே குறிப்பிடத்தக்க தேர்தல் திருப்புமுனையை உருவாக்கவில்லை.

பா.ஜ.க நேமம், கழக்கூட்டம் மற்றும் சாத்தன்னூர்  ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. ஆனால் இத்தொகுதிகளில் கட்சியின் வெற்றி என்பது கிறிஸ்தவ வாக்காளர்களின் தீர்க்கமான மாற்றத்தை விட, அதன் பாரம்பரிய இந்து ஆதரவுத் தளத்தின் காரணமாகவே கிடைத்தது.

குறைந்த அளவிலான தேர்தல் பலன்கள், பா.ஜ.க-விற்குள் அதன் கிறிஸ்தவ அணுகுமுறையின் திசை மற்றும் அரசியல் பலன் குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளன. சில தலைவர்கள் சமூகத்துடனான தொடர்பை தொடர்ந்து ஆதரித்து வந்தாலும், சங்க பரிவாரங்களின் பிரிவினர் மதமாற்றம் குறித்து அதிகளவில் குரல் கொடுத்து வருகின்றனர்.

எஸ்.சி அந்தஸ்து குறித்த மத்திய அரசின் குழு

கிறிஸ்தவம் அல்லது இஸ்லாமிற்கு மாறிய தலித்துகளுக்கு எஸ்.சி அந்தஸ்தை நீட்டிப்பது குறித்த கேள்வி தேசிய அளவிலும் பரிசீலனையில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில், மத்திய அரசு இந்தப் பிரச்சனையை ஆராய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் பணிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

Source link