எழுதியவர்: நிர்பய் தாக்கூர்
ராக்கி பிஷ்ட்டுக்கு, மகப்பேறு விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்புவது என்பது அவர் 14 ஆண்டுகளில் கட்டியெழுப்பிய வாழ்க்கைப் பாதைக்குத் திரும்புவதை குறித்திருக்க வேண்டும். மாறாக, ஜூலை 2024-ல் ஹாஷிகார்ப் (HashiCorp) நிறுவனத்திற்குத் திரும்பியபோது, தனது பணிப் பொறுப்பு வேறொருவருக்கு மாற்றப்பட்டிருப்பதை அவர் கண்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க
ஒரு சாட்டர்ட் அக்கவுண்டன்ட்டான பிஷ்ட், ஜூன் 2022-ல் அந்த மென்பொருள் நிறுவனத்தில் கணக்கியல் மேலாளராக மாத சம்பளம் ரூ.2.6 லட்சத்தில் சேர்ந்தார். டிசம்பர் 2023-ல் மகப்பேறு விடுமுறை எடுத்த பிறகு, அவர் மீண்டும் பணிக்குத் திரும்பியபோது நிறுவனத்தின் கருவூலத் துறையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பணிகள் ஒரு ‘ஸ்டாஃப் அக்கவுண்டன்ட்’ செய்யக்கூடியவை . இது அவரது பதவி நிலையை விட தோராயமாக மூன்று நிலைகள் குறைவானது. மேலும் அவை எழுத்தர் (Clerical) தன்மை கொண்டவையாக இருந்தன.
பிஷ்ட் அக்டோபர் 2024-ல் ராஜினாமா செய்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். அவர் இழப்பீடாக ரூ.50 லட்சமும், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாட்டுக்கு எதிரான கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கோரினார். ஆகஸ்ட் 31 அன்று, உயர் நீதிமன்றம் பிஷ்ட்டுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஹாஷிகார்ப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
“எந்தவொரு சூழ்நிலையிலும், பணிபுரியும் இடத்தில் மகப்பேறு என்பது அவமானத்தின் ஆதாரமாக மாற அனுமதிக்கப்படக் கூடாது,” என்று நீதிபதி சச்சின் தத்தா தனது உத்தரவில் தெரிவித்தார். அதாவது, ” அரசியலமைப்பு 14, 15, 21 மற்றும் 42 ஆகிய பிரிவுகளின் கீழ், கர்ப்பம் மற்றும் மகப்பேறை தொழில்முறை ரீதியிலான பாதகம், தரமிறக்கம், அந்தஸ்து இழப்பு அல்லது வாழ்க்கைப் பாதையின் முன்னேற்ற மறுப்பு ஆகியவற்றிற்கான காரணங்களாகக் கருத முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இத்தகைய நடவடிக்கைகள் பெண் ஊழியர்களுக்கு கிடைக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை மட்டுமின்றி, சமத்துவம், கண்ணியம், சமூக நீதி மற்றும் மனிதநேயமிக்க வேலை நிலைமைகள் குறித்த அரசியலமைப்பு அர்ப்பணிப்பையும் சீர்குலைக்கின்றன” என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது மனுவில் பிஷ்ட், தனது குழுவில் தனக்கு எந்த இடமும் காலியாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். புதிய பணிப்பொறுப்பு, தான் வேலைக்கு அமர்த்தப்பட்ட மேலாண்மை கணக்கியல் பதவிக்கு எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் கூறினார். கருவூலத் துறையில் ஒதுக்கப்பட்ட பணிகள் தனது தகுதிகள், அனுபவம் மற்றும் தொழில்முறை அந்தஸ்தை சீர்குலைப்பதாக பிஷ்ட் குறிப்பிட்டிருந்தார்.
“1961 ஆம் ஆண்டின் மகப்பேறு நலச் சட்டம் அல்லது 2020 ஆம் ஆண்டின் சமூக பாதுகாப்புச் சட்டப் புத்தகம் ஆகிய எதுவும், பெண் ஊழியர்கள் மகப்பேறுக்குப்பின் மீண்டும் பணியில் ஒருங்கிணைக்கப்படுவதற்கான விரிவான கட்டமைப்பை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை” என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இத்தகைய கட்டமைப்பு இல்லாதது, ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ பாதுகாப்புகளை திறம்பட அமல்படுத்துவதை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. மகப்பேறு விடுமுறையிலிருந்து திரும்பும் ஒரு பெண், சாதாரணமாக அந்த விடுமுறைக்குச் செல்வதற்கு முன்னதாக தான் வகித்த பதவிக்கே மீண்டும் அமர்த்தப்படத் தகுதியுடையவர் என்று நீதிமன்றம் கூறியது.
நம்பத்தகுந்த மற்றும் நிரூபிக்கக்கூடிய நிறுவன காரணங்களுக்காக, அந்த பதவி இனி கிடைக்கவில்லை என்றால், சம்பளம், கிரேடு, அந்தஸ்து, பங்கு, பொறுப்புகள், மேலாண்மை அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அதற்கு சாத்தியமான அளவு சமமான நிலையில் அவர் அமர்த்தப்படத் தகுதியுடையவர் என்று நீதிபதி தத்தா கூறினார்.
முந்தைய பதவி ஏன் கிடைக்கவில்லை என்பதை முதலாளிகள் விளக்க வேண்டும் என்றும், அதன் கிரேடு, ஊதியம், அறிக்கையளிக்கும் உறவு (Reporting Relationship) மற்றும் கடமைகள் உள்ளிட்ட மாற்றுப் பொறுப்பின் விவரங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். அப்பெண் ஆட்சேபனை தெரிவித்தால், அவரது கவலைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் மற்றும் முதலாளி தனது முடிவை காரணங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
சமீபத்தில் ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஒரு தனியார் மென்பொருள் நிறுவனமான ஹாஷிகார்ப், கர்ப்பம் தொடர்பான பணி இட வசதிகள், மகப்பேறு விடுமுறைக்கு பின் பணி மற்றும் அந்தஸ்தைப் பாதுகாத்தல், குழந்தைப் பராமரிப்பு வசதிகள், குறைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விதிகள் அல்லது திட்டங்களை உருவாக்க அல்லது வழிகாட்டுதல்களை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கை இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், பெண் ஊழியர்களுக்கான “பாதுகாக்கப்பட்ட காலம்” என்பது கர்ப்பத்தை ஆரம்பத்தில் வெளிப்படுத்துவதிலிருந்து அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிய 6 மாதங்கள் வரை நீடிக்க வேண்டும் என்ற முன்மொழிவு உட்பட, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஷிஷ் கே தீட்சித் வழங்கிய பரிந்துரைகளை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இந்த பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கீழ், ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பாமலோ அல்லது குறைந்த பதவிகளுக்கு தள்ளாமலோ நியாயமான பணி இட வசதிகளை வழங்குவதற்காக, கர்ப்பத்தை வெளிப்படுத்திய 7 நாட்களுக்குள் தனிப்பட்ட மதிப்பீடுகளைச் செய்ய முதலாளிகள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ரூ.10 லட்சம் இழப்பீடு தவிர, பிஷ்ட்டுக்கு வழக்கின் செலவுகளுக்காக ரூ.1.5 லட்சத்தை இரண்டு மாதங்களுக்குள் நிறுவனம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
