இதனிடையே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் விலகுவார்கள் என தவெகவுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திர எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரத்தால் நாளுக்கு நாள் தவெக – காங்கிரஸ் இடையே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராகுல் காந்தியே விஜய்யை பிரதமர் நாற்காலியில் அமர வைப்பார் என தவெக எம்.எல்.ஏ கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (02-09-26) பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவைக்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “முதல்வர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர். 2025லும் இதே மாதிரியான நிகழ்வு தான் நடந்தது, ஆனால் 2026இல் என்ன நடந்தது என்பதை இந்த நாடே பார்த்தது. அதனால் 2029இல் பிரதமர் யார் என்பதை டெல்லியில் இருந்து முடிவு செய்ய முடியாது, தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு செய்து வரும். அதனால் இந்திய அளவில் அதிர்ச்சியான ஒரு மாற்றம் கண்டிப்பாக 2029இல் பார்க்கும். விஜய்யை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்ததே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி தான், நம்ம தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல உட்கார வெக்க போறாரு” என்று கூறினார்.
