வங்கியில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டு; கைவரிசை காட்டிய ஊழியர்

உத்திர பிரதேச மாநிலம், சஹான்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் தணிக்கை குழு ஆய்வு செய்த போது, வங்கியின் பணப்பாதுகாப்பு அறையில் கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வங்கி கிளையில் இருந்து தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட பணத்தை அதிகாரிகள் எண்ணினர். அந்த தொகையை எண்ணும் போது, சுமார் 4.3 லட்ச ரூபாய் குறைவாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வங்கியின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சஹான்பூர் வங்கி கிளைக்கு விசாரணைக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. அவர்கள் அங்கிருந்த சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வங்கி ஊழியர் ஒருவர் பணத்தைத் திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.  அதனைத் தொடர்ந்து, வங்கியின் பணப்பாதுகப்பு அறையை விசாரணை குழுவினர் சோதனையிட்டனர். 

அப்போது தான், அங்கு 7.40 கோடி மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வங்கியின் மூத்த கோட்ட மேலாளர் ரவிகுமார் காஸ், வங்கியின் பணப்பாதுகாப்பு அறையின் மேலாளர் சுஷில் ஷர்மா, அமித்குமார் ஆகிய 3 பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதே நேரத்தில், காணாமல் போன ரூ.4.3 லட்சத்தைத் திருடிய வங்கி ஊழியர் விஷால் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் காணாமல் போன மற்றும் கள்ள நோட்டுகள் சம்பந்தமான தொகையின் மதிப்பு ரூ.17 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

Source link