டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒருவரைச் சந்திப்பதற்காக ஆகஸ்ட் 4ஆம் தேதி 16 வயது கொண்ட ஒரு சிறுமி சென்றார். அப்போது, கனமழையில் சிக்கியிருந்த அவருக்கு லிப்ட் தருவதாகக் கூறி சிறுமியைப் பேருந்தில் ஏற்றினர். அதன் பின்னர் ஓடும் பேருந்தில் அந்த சிறுமியிடம், பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும், டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட சொகுசு பேருந்தும் சோதனைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியலுக்கு ஆளான நிர்பயா வழக்கு(2012) நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே போல் அரங்கேறிய இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பலரும் வேதனை தெரிவித்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கேள்வி கேட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இது போல் நடப்பதை மீண்டும் மீண்டும் எப்படிப் பார்க்க முடியும். வெட்கக்கேடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
