திபெத்-நேபாள எல்லையில் பனிப்பாறை சரிவால் போட்டா கோஷி ஆற்றில் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று பெருவெள்ளம் ஏற்பட்டது. சகதியுடன் பல அடி உயரத்திற்கு அடித்துவரப்பட்ட இந்த வெள்ளத்தில் ஆற்றின் கரையோரங்களிலிருந்த பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் முற்றிலுமாக அழிந்தன. இந்த வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீர் மின் நிலையங்கள் உட்படப் பல உள்கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டன. இந்த வெள்ளப் பேரிடரில் 1050 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில், பல ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த போட்டாகோஷி ஆறானது நேபாளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. இந்த ஆற்றில் வழக்கத்திற்கு மாறான மற்றும் புதிய வகையான மீன்கள் ஏராளமாக அடித்து வரப்படுகின்றன. இந்த மீன்களைப் பிடித்துச் சாப்பிடவோ, விற்கவோ அல்லது வாங்கவோ வேண்டாம் என்று பீகார் மாநில அரசு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக அங்குள்ள தொழிற்சாலைகள் கழிவுகள், ரசாயனங்கள், சாக்கடை கழிவுகள், இறந்த விலங்குகளின் உடல்கள் மற்றும் பிற கழிவுகள் இந்த ஆற்றில் கலக்கப்பட்டிருக்கும். அதனால், இந்த மீன்களைச் சாப்பிடும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்த ஆற்றிலிருந்த மீன்களைப் பிடித்துச் சாப்பிட்ட பலரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
