DA Hike Expectation,மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: வெளியான புள்ளி விவரங்கள் – அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு – dearness allowance for central govt employees may touch 64 percent as cpi-iw rise

தொழில்துறை தொழிலாளர்களுக்கான குறியீடு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2027ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் கிடைக்கவுள்ள அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏனெனில், தொழிற்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் ( CPI-IW ) 2026 ஜூலை மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் 151.9 ஆக இருந்த இந்தக் குறியீட்டு எண் ஜூலை மாதத்தில் மாத அடிப்படையில் 1.3 புள்ளிகள் அதிகரித்து 153.2 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவரங்களை மத்திய தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 2.66 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தின் ஆண்டு அடிப்படையிலான பணவீக்கம் 4.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் 88 முக்கிய தொழிற்துறை மையங்களில் உள்ள 317 சந்தைகளில் சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் இந்தத் தரவு தொகுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆறு பிரிவுகளிலும் உயர்வு!

ஜூலை மாதத்தில் அனைத்து ஆறு முக்கிய துணைப் பிரிவுகளிலும் விலை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் பானங்கள் குறியீடு ஜூன் மாதத்தில் இருந்த 157.1 என்ற புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 158.9 ஆகவும், வீட்டு வாடகை குறியீடு 140.6 என்ற புள்ளியிலிருந்து 143.0 ஆகவும் உயர்ந்துள்ளது. எரிபொருள் மற்றும் விளக்கு எரிபொருள் குறியீடு 159.2 புள்ளியிலிருந்து 159.9 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, ஆடை மற்றும் காலணிகள் குறியீடு 157.6 என்ற புள்ளியிலிருந்து 158.0 ஆக உயர்ந்துள்ளது. புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் பிரிவு சிறிய அளவில் உயர்ந்து 176.9 ஆகப் பதிவானது. இதர பிரிவுகளின் குறியீடு 148.2 ஆக அதிகரித்துள்ளது.

அகவிலைப்படியை எவ்வாறு பாதிக்கும்?

7ஆவது ஊதியக் குழுவின் வரம்பின் கீழ் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றைக் கணக்கிட இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுவதால், இந்தச் சமீபத்திய CPI-IW புள்ளி விவரம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக அகவிலைப்படி ஆண்டிற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இதன் மாற்றங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இந்தக் கணக்கீடு 12 மாத கால சராசரி CPI-IW புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

64 சதவீதத்தை நெருங்குமா அகவிலைப்படி?

தற்போது, ஜூலை மாதத்திற்கான குறியீடு வெளியாகியுள்ள நிலையில் 2027 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி திருத்தம் 64 சதவீதத்தை நெருங்கியுள்ளது. எனினும், இது இறுதி அகவிலைப்படி விகிதம் அல்ல. இறுதி சதவீதம் என்பது 2026 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளியாகவுள்ள CPI-IW குறியீடுகளையும், அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பொறுத்தே அமையும். தற்போதைய கணக்கீட்டில் பயன்படுத்தப்படும் 12 மாத CPI-IW சராசரி (2025 ஆகஸ்ட் முதல் 2026 ஜூலை வரை) தோராயமாக 149.21 ஆக உள்ளது. எனினும், 2027 ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி விகிதத்தை நிர்ணயிக்க இன்னும் ஐந்து மாதங்களுக்கான புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன.

அதிகரிக்கும் பணவீக்கம் அகவிலைப்படியை உயர்த்தும்!

நடப்பு 2026ஆம் ஆண்டு முழுவதும் CPI-IW குறியீடு தொடர்ந்து அதிகரித்து வருவது மத்திய அரசு ஊழியர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட இந்த அகவிலைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் குறியீடுகள் உயர்ந்தால் பொதுவாக அகவிலைப்படி கணக்கீட்டை உயர்த்துகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தொழிற்துறை தொழிலாளர்கள் சந்திக்கும் விலை அழுத்தத்தை ஜூலை மாதத்தின் 4.57 சதவீத ஆண்டு அடிப்படையிலான CPI-IW பணவீக்கம் காட்டுகிறது.

அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டும்!

இருப்பினும், ஊழியர்கள் தற்போதைய 64 சதவீத மதிப்பீட்டை உறுதிப்படுத்தப்பட்ட அகவிலைப்படி விகிதமாகக் கருதக்கூடாது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத CPI-IW குறியீடுகள் இறுதி கணக்கீட்டை மாற்றியமைக்கலாம். தொழிலாளர் பணியகத்தின் வெளியீட்டு அட்டவணைப்படி, 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான CPI-IW தரவு செப்டம்பர் 30 அன்றும், செப்டம்பர் மாதத் தரவு அக்டோபர் 30 அன்றும் வெளியிடப்பட உள்ளது. 12 மாத கணக்கீட்டு சுழற்சியை நிறைவு செய்யும் டிசம்பர் 2026 குறியீடு 2027 ஜனவரி 29 அன்று வெளியிடப்பட உள்ளது.

தற்போது, ஜூலை மாத CPI-IW குறியீடு 2027 ஜனவரி மாத அகவிலைப்படி திருத்தம் அதிகமாக இருக்கலாம் என்ற வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எனினும் மீதமுள்ள ஐந்து மாதங்களின் பணவீக்கத் தரவுகள் வெளியான பின்னர்தான் சரியான உயர்வு எவ்வளவு என்பது தெரியவரும்.

Source link