முதல்வரின் இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது.. அனைவரும் வரவேற்க வேண்டும்: அமைச்சர் வன்னி அரசு பேச்சு – minister vanni arasu welcomed the cm joseph vijay announcement in assembly

இன்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் 110 விதிகளின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த ஆட்சிக்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருடைய இந்த அறிவிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேச ஆரம்பித்தனர். அந்த வகையில் அமைச்சர் வன்னி அரசு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது 110 விதியின் கீழ் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில் அதற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து திமுகவின் கொறடா எ.வ. வேலு, தவெக ஆட்சியில் இனிமேல் விவசாயிகள் உள்ளிட்ட போராடுபவர்கள் மீது வழக்கு போட மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

அதே போல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தவெகவின் 100 நாள் ஆட்சியில் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அவைத்தலைவர் செங்கோட்டையன், முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட அதிகாரம் உள்ளது. அதனை வேறு வழியில் மாற்றி திருப்புவது சரியாக இருக்காது என தெரிவித்தார்.

இப்படியாக முதல்வரின் அறிவிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் வன்னி அரசு இன்றைய அறிவிப்பினை வரவேற்று பேசினார். இது தொடர்பாக அவையில் அவர் பேசும்போது, நம்முடைய மரியாதைக்குரிய அண்ணன் எ.வ. வேலு இனிமேல் வழக்கு போட மாட்டார்கள் என்று கேட்டார்கள். இதற்கு உதாரணங்கள் உள்ளது. கலைஞரின் பராசக்தி படத்தினை போல நானே பாதிக்கப்பட்டவன்.

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில், அந்த மக்களுடன் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக போராடியவன் நான். அப்போது அந்த போராட்ட குழு சார்பாக சுப உதயகுமார், அன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று சொன்னார். அதனை ஏற்றுக்கொண்டு 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் வழக்குகளை எல்லாம் திரும்ப பெற்றார்.

நானும் இதில் பாதிக்கப்பட்டவன். ஒரு மாதத்திற்கும் மேலாக திருச்சி சிறையில் இருந்தேன். அந்த வழக்கினை திரும்ப பெற்றதன் அடிப்படையில் பல மாணவர்களின் வாழ்க்கை விடுப்பட்டது. இதற்காக அன்றைக்கே நன்றி சொன்னோம். இன்றைக்கு இந்த வழக்குகள் திரும்ப பெற்றுள்ளது தொடர்பாக பல மாணவர்களின் வாழ்க்கை விடுபட்டுள்ளது.எனவே இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அனைவரும் சேர்ந்து இதனை வரவேற்க வேண்டும் என்றார்.

Source link