சென்னை ரேடியல் ரோட்டில் சுமார் 15 லட்சம் சதுர அடியில் தனது பிரம்மாண்டமான புதிய கிளை ஒன்றை அமைக்க தி நியூ சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழிலதிபர் சரவணன் அருள் தலைமையிலான லெஜண்ட் குழுமத்தின் 4-வது கிளையாக உருவெடுக்கவுள்ள இந்த வளாகம், சென்னையின் ஒரே கூரையின் கீழ் இயங்கும் மிகப்பெரிய தனிநபர் ரீடெய்ல் அவுட்லெட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சதுர அடி ரூ.10,000 என மதிப்பிடப்பட்டுள்ள இந்த நிலத்தின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.1,500 கோடியாகும். பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலம், தற்போது ரேடியல் ரோடு முக்கிய வணிகப் பகுதியாக மாறியுள்ளதால் மிகப்பெரிய அளவில் மதிப்புக் கூடி இருக்கிறது. சுமார் ரூ.2,500 கோடி வருவாய் ஈட்டும் லெஜண்ட் குழுமம், தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்கும் மாடலை இதன் மூலமும் தொடர்கிறது.
இந்த பிரம்மாண்ட ஷோரூமில் தங்கம் மற்றும் வைர நகைப்பிரிவு, ஃபர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கப் பெறுகின்றன.
தற்போதைய கிளைகளின் விவரம்
தி நகர்: 1.5 லட்சம் சதுர அடி
பாடி: 3.7 லட்சம் சதுர அடி
அண்ணா நகர் (பார்க் ரோடு): 1.3 லட்சம் சதுர அடி
சில்லறை வர்த்தகத்தில் புதிய டிரெண்ட்: ரீடைன்மென்ட் (Retainment)
இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் (RAI) தலைமை நிர்வாக அதிகாரி குமார் ராஜகோபாலன் டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் இது குறித்துக் கூறுகையில்,
”சென்னை தற்போது பல்வேறு கலாச்சார மக்கள் வாழும் பெருநகரமாக மாறியுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள இந்த காலத்தில், மக்கள் வெறும் பொருட்களை வாங்க மட்டும் கடைகளுக்கு வருவதில்லை; பொழுதுபோக்கையும் சேர்ந்தே எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக தென்னிந்தியாவில் திரைப்பட கலாச்சாரம் அதிகமாக இருப்பதால், ரீடெய்ல் மற்றும் என்டர்டெயின்மென்ட் சேர்ந்த “ரீடைன்மென்ட்” மாடலுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது” என்றார்.
தமிழகத்தில் புதிய தொழில்கள், சேவைத் துறை வளர்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வருகையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தென்னிந்தியாவில், குறிப்பாய் சென்னையில் நவீன சில்லறை வர்த்தகம் 9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பொருட்களின் விற்பனையோடு பொழுதுபோக்கையும் இணைத்து வழங்கப்படும் இந்த மெகா ஷோரூம், சென்னை மக்களுக்கு ஒரு புதிய ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
