“வர்றேன்னு சொல்லி போனவர் வரல!”… 265 தொழிலாளர்களை சுரங்கப்பாதைக்குள் தவிக்கவிட்டு தப்பிய சீன அதிகாரி!. நேபாளத்தில் கொடூரம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

நேபாளத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் போது, திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் பணியாற்றிய 265 தொழிலாளர்களை ஆபத்தில் தவிக்கவிட்டு சீன மேற்பார்வையாளர் ஒருவர் தப்பி சென்றதாகத் தப்பிய தொழிலாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுரங்கப்பாதையில் நிலவிய பீதி: சுரங்கப்பாதை எண் 3-ல் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராஜ் சேத்ரி என்ற தொழிலாளி பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், பேரழிவு ஏற்பட்டபோது சுமார் 265 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பணியில் இருந்தனர். திடீரெனப் புயல் வீசுவது போன்ற பயங்கர சத்தம் கேட்டதால், ஆபத்தை உணர்ந்த சேத்ரி உடனடியாக சீன மேற்பார்வையாளரை எச்சரித்து வெளியேற அனுமதி கேட்டுள்ளார். ஆனால், “நீங்கள் வேலையைத் தொடருங்கள், நான் வெளியே என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருகிறேன்” எனக் கூறிச் சென்ற அந்த மேற்பார்வையாளர் மீண்டும் திரும்பி வரவே இல்லை.

பெருவெள்ளமும் மரண ஓலமும்: மேற்பார்வையாளர் சென்ற சிறிது நேரத்திலேயே, வெள்ளமும் களிமண் இடிபாடுகளும் சுரங்கத்திற்குள் சீறிப்பாய்ந்து வந்தன. ஆபத்தை உணர்ந்து நுழைவாயிலை நோக்கி ஓடிய சேத்ரியுடன் 4 பேர் தப்பினர். ஆனால் அவர்களில் இருவர் இன்னும் மாயமாகியுள்ளனர். முதன்முதலில் ஆபத்து உணரப்பட்டபோதே வெளியேற உத்தரவிட்டிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று அவர் கூறினார்.

வெள்ளத்திற்குப் பிறகு சுரங்கத்திற்குள் பல சடலங்கள் கிடந்ததாகவும், உள்ளே சிலர் உயிருடன் கதறும் குரல்கள் கேட்டதாகவும், மற்றவர்களை மீட்பதா அல்லது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதா என்ற வேதனையான சூழல் நிலவியதாகவும் அவர் தெரிவித்தார். வெள்ளத்தில் இருந்து தப்பிய சேத்ரியும் மற்ற தொழிலாளர்களும் மலைப் பகுதிக்கு ஓடி, காட்டில் உள்ள ஒரு மரத்தின் அடியில் இரவை கழித்துள்ளனர். மொபைல் நெட்வொர்க் சேவைகள் முற்றிலும் முடங்கியதால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.

சீனா மீது குற்றச்சாட்டு: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் குறித்து சீன அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்தும், நேபாளத்திற்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்கத் தவறிவிட்டதாக சேத்ரி குற்றம் சாட்டியுள்ளார். முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் தொழிலாளர்களும் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருக்க முடியும் என்றார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போதைய கள நிலவரம்: சுரங்கப்பாதைக்குள் இருந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. நேபாளப் பெருவெள்ளத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது; சுமார் 4,000 பேர் இன்னும் மாயமாகியுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Source link