பாட்னா: பீஹார் மாநிலம் கங்கை ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், கரையோரத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான சைதி துர்கா கோவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தொடர் கனமழையினால் கங்கை உள்பட பீஹாரில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. கங்கையையொட்டியுள்ள பஹல்பூர் மற்றும் பெகுசராய் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கரையேதர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பஹல்பூர் மாவட்டம் ரகோபூரில் கரையோரத்தில் அமைந்துள்ள நூறு ஆண்டு பழமையான சைதி துர்கா கோவில், கங்கை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பேரதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கங்கை நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால் ஏற்பட்ட மண் அரிப்பால், சவாலான சூழல் உருவாகியுள்ளதாக நீர் வளத்துறையை நிர்வகிக்கும் பீஹார் துணை முதல்வர் விஜய்குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். கங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், டில்லியில் நடைபெற்ற கூட்டத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு, அவர் மீண்டும் பாட்னா திரும்பியுள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக நீர்வளத்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
