தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ரூ.3,637 கோடி அகவிலைப்படி (டி.ஏ.) நிலுவைத் தொகையை 49 மாத தவணைகளில் வழங்கி தீர்க்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 98,000 ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த அறிவிப்பின் மூலம் பயனடைய உள்ளனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, முதல் 48 மாதங்களுக்கு மாதம் ரூ.75 கோடியும், கடைசி மற்றும் 49-வது மாதத்தில் மீதமுள்ள ரூ.37 கோடியும் வழங்கி நிலுவைத் தொகை முழுமையாகச் செலுத்தப்படும்.
நீண்டகால சட்டப் போராட்டம்:
தமிழக மின் வாரியங்கள் (டி.என்.பி.டி.சி.எல்., டி.என்.பி.ஜி.சி.எல்., டான்டிரான்ஸ்கோ) உள்ளிட்ட பிற அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அது மறுக்கப்பட்டு வந்தது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும் தொடர்ந்த இந்த விவகாரம், இறுதியில் நீதிமன்ற கதவுகளைத் தட்டியது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பில், “பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியைப் பெறப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும் முழு உரிமை உண்டு” எனத் தெரிவித்து, நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு உடனடியாக வழங்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், சீராய்வு மனுக்கள் மற்றும் தொண்டு மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், பணியில் உள்ள ஊழியர்களுக்கு இணையான டி.ஏ. உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு:
நிலுவையில் இருந்த ரூ.3,637 கோடியை 60 மாத தவணைகளில் (மாதம் ரூ.60.62 கோடி) வழங்க அரசு முதலில் திட்டமிட்டிருந்தது. எனினும், ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் போது, இந்த தொகையை மாதம் ரூ.75 கோடியாக உயர்த்தி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, 48 மாதங்களுக்கு தலா ரூ.75 கோடியும், 49-வது மாதத்தில் மீதமுள்ள ரூ.37 கோடியும் வழங்குவதாக உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம், ஆகஸ்ட் 21 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தது.
நிதி ஒதுக்கீடு மற்றும் வழிகாட்டுதல்கள்:
அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களும் டி.என்.எஸ்.டி.சி. ஊழியர்கள் ஓய்வூதிய நிதிய அறக்கட்டளையுடன் இணைந்து, தங்களிடம் உள்ள நிதியாதாரங்களில் இருந்து இந்த தவணைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில், அரசு வழங்கக்கூடிய நிதியுதவி அல்லது தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் (டி.என்.டி.டி.எஃப்.சி.) மூலமாகப் போக்குவரத்துக் கழகங்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த நிதி உதவிகள், அந்தந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்கும் மானியம் அல்லது நிதி ஈடுபாட்டு நிதியில் ஈடுகட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய நிதிய அறக்கட்டளை ஒவ்வொரு ஓய்வூதியதாரரின் தகுதியையும் சரிபார்த்து, கணக்குகளைத் தணிக்கை செய்த பின்னரே தொகையை விடுவிக்கும். மேலும், ஒவ்வொரு மாதமும் பயன் பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் விநியோகிக்கப்பட்ட தொகை குறித்த அறிக்கையை அடுத்த தவணைக்கு முன்பாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிய அறக்கட்டளையின் தற்போதைய நிதிநிலைமை, நிதிச் சிக்கல்கள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்தத் தவணை முறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
