“கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்” – கதிர்

துல்கர் சல்மான் புதிதாக தயாரித்து நடித்துள்ள படம் ‘ஐ எம் கேம்’. இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்பினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் முன் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில்.. நடிகர் கதிர் பேசுகையில், “இப்படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.

இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி. என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். அந்த அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது. இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது” என்றார்.

Source link