மும்பை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியானின் மர்ம மரணம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன்பாக, சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான் என்பவர், ஜூன் 8ம் தேதி, புறநகர் பகுதியான மாலாத்தில் உள்ள உயரமான கட்டடத்தின் 14 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரித்து வரும் நிலையில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று திஷா சலியானின் தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, திஷா சலியானின் மரணம் குறித்த விசாரணையை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரியை நியமிக்குமாறு ஆணையிட்டது. இந்த வழக்கில், எப்ஐஆர் பதிவு செய்யவும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிபதிகள் கூறியதாவது; விசாரணையில் உறுதியான சாட்சிகள் கிடைக்கும் வரை யாரையும் குற்றம் சாட்டப்பட்டவராகக் கருதக்கூடாது. குற்றச் செயல் கண்டறியப்பட்டால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், திஷாவின் தந்தை சதீஷ் சலியானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
