திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; திருமலை முகாம் அலுவலகத்தில் கண்காணிப்பு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலின் துணை நிர்வாக அதிகாரியான மெண்டு லோகநாதம் வீட்டில், ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (02.09.2026) காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7 குழுக்கள்… 6 மணி முதல் அதிரடி சோதனை

ஆந்திரப் பிரதேச லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சீனிவாச ராவ் தலைமையிலான 7 சிறப்பு அதிகாரிகள் குழுவினர், இன்று அதிகாலை 6 மணி முதல் இந்தச் சோதனையைத் தொடங்கினர். திருப்பதி பெத்தகாப்பு லே-அவுட் பகுதியில் உள்ள லோகநாதத்தின் இல்லத்தில் அதிகாரிகள் நுழைந்தபோது அவர் வீட்டிலேயே இருந்தார்.

இல்லத்தில் சோதனை நடைபெறும் அதே வேளையில், திருமலையில் உள்ள அவரது முகாம் அலுவலகம், அலுவலக விருந்தினர் இல்லம் ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முகாம் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அதிகாலை முதலே அதிகாரிகள் பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

உறவினர்கள் வீடுகளிலும் சோதனை:

லோகநாதத்திற்குச் சொந்தமான இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. திருப்பதியில் உள்ள அவரது இரு மைத்துனர்களின் வீடுகள் மற்றும் ஏற்பேடு மண்டலம் செல்லூரில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதன நடத்தி வருகின்றனர்.

மேலும், திருப்பதி எஸ்.டி.வி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) கிளையில் லோகநாதத்திற்குச் சொந்தமான வங்கி லாக்கர்களை அதிகாரிகள் நேரில் திறந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தேவஸ்தான வட்டாரத்தில் பெரும் பரபரப்பு:

தற்போது திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சுவாமி கோவிலின் துணை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் லோகநாதம், இதற்கு முன்பாகவும் திருப்பதி தேவஸ்தானத்தில் (டி.டி.டி) பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை இத்தகைய அதிரடிச் சோதனையை நடத்துவது கடந்த பத்தாண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2016-ம் ஆண்டு, அன்றைய தேவஸ்தான துணை நிர்வாக இயக்குநராக இருந்த டி. பூபதி ரெட்டியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி, கணக்கில் வராத ஏராளமான மனைப் பத்திரங்கள் மற்றும் சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இந்த அடுத்தடுத்த அதிரடிச் சோதனைகள் தேவஸ்தான வட்டாரத்திலும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link