மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி, எல்லை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையிலும், காவிரி நதிநீர் பங்கீட்டு அடிப்படையிலும் கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நதிநீரை வழங்காமல் இடையூறு செய்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கிடைக்கவேண்டிய 7 டி.எம்.சி தண்ணீரை வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனிடையில் கர்நாடகா மேகதாது அணையை கட்டினால், காவிரி நீர் முழுமையாகத் தமிழகத்திற்கு வருவது நிறுத்தப்படும். இதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து இது தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

புதுச்சேரியிலும் மேகதாது அணை கட்டப்பட்டால் பாதிப்பு ஏற்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. கர்நாடக முதலமைச்சர் நாங்கள் மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனத் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை காரைக்கால் விவசாயிகள் முழுமையாக எதிர்க்கிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலித் சமுதாயத்தை அவமதித்ததாக ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். இது தலித் மக்களை மதிக்காத, தலித் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். வன்கொடுமை ஒழிப்புச் சட்டம் இருந்தாலும், அதனைப் பற்றி எல்லாம் மோடி அரசு கவலைப்படவில்லை. நரேந்திர மோடியும் அமித் ஷாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் என்று தெரிவித்தார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் வானத்திலேயே கோட்டையைக் கட்டுகிறார்கள். 14,500 கோடி ரூபாய்க்குத் துணைநிலை ஆளுநர் பட்ஜெட் அறிவித்துள்ளார். உப்புச் சப்பில்லாத உரையை பட்ஜெட்டில் துணைநிலை ஆளுநர் வாசித்துள்ளார். சிலிண்டர் மானியம் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்த்தியதைத் தவிர வேறு ஒன்றும் முதலமைச்சர் ரங்கசாமியின் நிதிநிலை அறிக்கையில் இல்லை என நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புதுச்சேரியில் தற்போது கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என மத்திய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. மத்திய அரசை வலியுறுத்தினால் தவிர, மாநில அந்தஸ்து கிடைக்காது. எனவே பிரதமரைச் சந்தித்து முதலமைச்சரும் அமைச்சர்களும் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், மாநில அந்தஸ்து இருந்தால் மட்டுமே புதுச்சேரி வளர்ச்சி பெறும் என்றும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக (தவெக) எம்.எல்.ஏ ஒருவர் விஜய் பிரதமராக வருவார் எனக் கூறியது குறித்துக் கேட்கப்பட்டபோது, அந்தந்தக் கட்சி நிர்வாகிகள் தங்கள் தலைவர்கள் பிரதமராக வேண்டும், ஆளுநராக வேண்டும் என்று கூறுவது வழக்கம் தான் எனக் குறிப்பிட்டார். மேலும், 2029 பாராளுமன்றத் தேர்தலின் போது இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் இருப்பார் என்றும், தவெக உறுப்பினர்கள் பேசுவது இறுதியான முடிவல்ல, அதை இண்டியா கூட்டணித் தலைவர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். விஜய் அவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வருவதை ஏற்றுக் கொள்வார் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

Source link