தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல ஏஐ-யின் ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலாவி வரும் வீடியோ குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் தமிழக முதல்வர் விஜய் பேசுவதைப் போல ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கப்பட்ட டீப் பேக் வீடியோ ஒன்று பொதுமக்களிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இந்த போலி வீடியோக்கள் பாகிஸ்தானை சேர்ந்த முகநூல் மற்றும் சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து பகிரப்பட்டு இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக சந்தேகித்துள்ளனர்.
முதல்வர் விஜய் இந்தி மொழியில் பேசுவதை போல உள்ள அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் யாருக்கேனும் நிதி உதவி தேவை என்றால் கொடுக்கப்பட்ட வாட்ஸப் நம்பருக்கு மெஜேஜ் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வீடியோவால் சந்தேகமடைந்த சிபிசிஐடி சைபர் கிரைம் போலீசார் கடந்த ஒன்றாம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொய்யாக உருவாக்கப்பட்ட இந்த காணொளி தொடர்பாக போலியான ஐடி மற்றும் அது தொடர்பான லோகோ குறித்து தகவல்களை மெட்டா நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலி காணொளிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து சமூக ஊடகங்களில் நடைபெறும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
