அயோத்தி: அயோத்தி கோவில் சிஇஓ ஆக விமானப்படையில் ஏர் மார்ஷல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜீதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கைகளில் முறைகேடு என எழுந்த புகார்களை தொடர்ந்து, 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.அதில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் இருந்த தற்காலிக ஊழியர்கள், முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதே நேரத்தில் இனி முறைகேடுகள் நடக்காமல் இருக்க, புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன.
தலைமை செயல் அதிகாரி பதவிக்கு 5,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவை சரி பார்க்கப்பட்டு, அதில் இருந்து தகுதியானவர்களாக 18 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷணுகாந்த் சதுர்வேதி,ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை முன்னாள் தலைவர் மற்றும் விஞ்ஞானியான சுரேஷ் ஹவாரே ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இந்நிலையில், அயோத்தி கோவில் முதல் தலைமை செயல் அதிகாரியாக விமானப்படையில் ஏர் மார்ஷல் ஆக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜீதேந்திர மிஸ்ரா மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
விமானப்படையில் 39 ஆண்டு அனுபவம் உள்ள ஜீதேந்திரா மிஸ்ரா, போர் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கு வான் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பு ஏற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தலைமை ஏற்றார்.
